பெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்.

பெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்.

வலி மிகுந்த வாழ்க்கை பயணம். வழி நெடுக்க புதுப்புது முகங்கள். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உறவாக மனதில் பதிந்தாலும் எந்த உறவும் இறுதிவரை வரப்போவதில்லை. வாழும் வரை போராட்டம். வாழ்க்கை ஒரு தேரோட்டம். அவசரமாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் அன்றாடம் பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டி உள்ளது.
உறவுகளின் ஒத்துழைப்பும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும் சிறப்பாக இருந்தால் மலை போன்ற பிரச்சனைகளும் கடுகு போல் தெரியும் எதையும் சமாளிக்க கூடிய வல்லமையும் ஆற்றலும் உண்டாகும். எளிதில் முன்னேற்றத்தையும் அடைந்து விட முடியும். பெரியோர்களின் அதரவு என்பது தந்தை, தந்தை வழி உறவினர்கள், வயதில் மூத்தவர்களை குறிக்கும். வேலைக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு மேலதிகாரிகளையும், தொழில் செய்பவர்களுக்கு தொழில் வாய்ப்பை தரும் நபர்களையும், அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளையும் குறிக்கும்.
ஆண் கிரகங்களில் முதன்மை கிரகமான சூரியன் பலமாக இருந்தால் பெரியோர்கள், வயதில் மூத்தவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சூரியன் ஆட்சி உச்சம் பெற்றாலும், சூரியனுக்கு நட்பு கிரகங்களான குரு, சந்திரன், செவ்வாய், போன்றவற்றின் சேர்க்கை பெற்றாலும் அல்லது இவற்றின் நட்சத்திர சாரத்தில் இருந்தாலும் நற்பலன்களை அடைய முடியும். இதுமட்டுமின்றி சுக்கிரன், புதன் போன்ற சுப கிரக சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும் பெரியோர்களின் ஆசி, ஆதரவு மிக சிறப்பாக இருக்கும், தந்தை, தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு, ஒத்துழைப்பு நன்றாக இருக்கும், உழைப்பிற்கான ஊதியம் கிட்டும். பொருளாதார ரீதியாகவும் அனுகூலங்களை அடைய முடியும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிட்டும். வங்கிகள் மூலமும் சாதகமான பலனை அடைய முடியும்.
சூரியன் நீசம் பெற்று துலா ராசியில் இருப்பதும், சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி ராகு சேர்க்கை பெறுவதும், சனி ராகுவின் நடசத்திரங்களாகிய பூசம், அனுசம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவற்றில் அமைவதும் நல்லதல்ல. குறிப்பாக சூரியன் ராகுவிற்கு மிக அருகில் இருப்பதும், சூரியன் ராகு அல்லது சனி சேர்க்கை பெறுவதும், சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் அமைவதும் கடுமையான தோஷம் ஆகும். இதனால் சனி மற்றும் ராகு தசா, புத்தி நடைபெறும் காலங்களில் தந்தையிடம் அல்லது தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் வீண் பிரச்சனைகள் அதனால் அவப்பெயரை எடுக்கும் சூழ்நிலை உண்டாகும்.
தொழில் செய்வர்களுக்கு அரசு வழியில் பிரச்சனை, சட்ட சிக்கல், வருமான வரி துறை மூலம் திடீர் நெருக்கடிகள் உண்டாகிறது. முடிந்தவரை இக்காலங்களில் வயதில் மூத்தவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது, மேலதிகாரிகளிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. தொழில் செய்பவர்கள் ஏதாவது பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிட்டால் நேரடியாக களத்தில் இறங்காமல் நம்பிக்கைக்குறிய நபர்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது மூலம் ஓரளவுக்கு பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *