பிறந்த தேதி நவரத்தினம்

பிறந்த தேதியும் நவரத்தினங்களும்

ஒரு மாதத்தில் 1 லிருந்து 30 அல்லது 31 தேதிகள் உள்ளது. இதில் செப்டம்பர், ஏப்ரல், ஜுன், நவம்பர் ஆகிய மாதங்களில் 30 நாட்கள் வரும். பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களாகும். லீப் வருடம் என்றால் 29 நாட்கள் வரும். இதுவும் 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும்.

ஜனவரி, மார்ச், மே, ஜுலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 31 நாட்கள் வரும்.

ஒருவர் 1,10,19 ஆகிய தேதிகளில் பிறக்கிறார் என்றால் அவர் 1ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது சூரியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் மாணிக்கமாகும்.

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவர் 2ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராவார். இது சந்திரனின் ஆதிக்கமாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் முத்தாகும்.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 3ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது குருவின் ஆதிக்கம் கொண்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் புஷ்ப ராகமாகும்.

4,13,22 ஆகியவை 4ஆம் எண்களாகும். இவை ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டதால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் கோமேதகமாகும்.

5,14,23 ஆகிய 5ஆம் எண்களாகும். இவை புதனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாதலால் இவர்கள் அணியவேண்டிய ரத்தினம் மரகத பச்சை.

6,15,24 ஆகியவை 6ஆம் எண்களாகும்.இவை சுக்கிரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைரமாகும்.

7,16,25 ஆகிய 7ஆம் எண்களாகும். இவை கேதுவின்  ஆதிக்கத்திற்குட்பட்டவை யாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைடூரியம்.

8,17,26 ஆகியவை 8ஆம் எண்களாகும். இவை சனியின்  ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் நீலக்கல்லாகும்.

9,18,27 ஆகியவை 9ஆம் எண்களாகும். இவை செவ்வாயின்  ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டியது பவளமாகும்.

தசா புக்தியும் நவரத்தினங்கள்

நவகிரகங்களின் தசா புக்திக்குரிய நவரத்தினங்கள்

ஓருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைக் கொண்டு தான் அவர்களுடைய தலை எழுத்தானது நிர்ணயிக்கப்படுகிறது. 12 கட்டங்களும் 9 கிரகங்களுமா நம்வாழ்வை நிச்சயிக்கின்றன? என பலர் ஆச்சர்யப்படலாம். யாரையும் நம்ப வைப்பதோ, கட்டாயத்திற்குட்படுவதோ நோக்கமல்ல. ஆனால் ஒன்றை மட்டும்தெளிவாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பிறக்கும்போது எந்ததெந்த கிரகங்கள் என்னென்ன நிலையில் உள்ளதோ அவை இறக்கும் வரை அப்படியேதான் இருக்கும். பிறந்த நட்சத்திரத்துக்குரிய  கிரகத்தின் திசையில் ஆரம்பித்து அடுத்தடுத்து என்னென்ன கிரகங்கள் வருமோ அந்தந்த திசைகள் வந்தே தீரும்.

உதாரணமாக ஒருவர் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருப்பாரேயானால் அவருக்கு முதலாவதாக வரக்கூடிய திசை சூரிய திசையாக இருக்கும். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கர்ப செல் நீக்கி இருப்பு என கணக்கிட்டு 3 வருடம் 2 மாதம் 27 நாட்கள் என கொடுத்திருப்பார்கள். அதாவது இவரின் சூரிய திசை 3 வருடங்கள் 2 மாதங்கள் 27 நாட்கள்  மீதமிருப்பதாக கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து சந்திர திசை 10 வருடங்கள்,செவ்வாய் 7வருடங்கள், ராகு 18  வருடங்கள், குரு 16 வருடங்கள் என தொடர்ந்து சனி, புதன், கேது, சுக்கிரன் என திசைகள் நடைபெறும்.

ஜெனன ஜாதகத்தில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்து அதன் திசை புக்தி காலங்களில் ஜாதகர் சுபிட்சமானப் பலனைப் பெறுவார். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி அமைந்து விட்டால் அதற்குரிய கெடுபலன்களை அடைந்தே தீர வேண்டும். ஒரு கிரகத்திற்கு பலத்தை கொடுப்பதற்கோ, பலமிழக்க செய்வதற்கோ மனிதனாக பிறந்த நமக்கு எந்த சக்தியுமில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கெடுபலன்களை குறைப்பதற்காகவும் அதன் பிடியிலிருந்து தப்பித்து கொள்வதற்காகவும் தான் இப்படி நவரத்தின கற்களை அணிந்து கொண்டு இறைவழிபாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இது மட்டுமல்லாமல் நவகிரகங்களுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும் நல்லது. நவரத்தின கற்களை எந்த கிரகத்திற்காக அணிகிறோமோ அந்த ஒளிக்கதிரானது நம் மீது பட்டு அதனால் உண்டாகக்கூடிய கெடுபலன்கள் விலகி வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

Coral

பவழம்  (Coralசெவ்வாய்

பவழம் கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்தவையாகும். இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும்.  இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. கடலில் விளையும் இரு ரத்தினங்களில் பவழம் பவழப்பூச்சிகள் எனப்படும். சிறிய உயிரினங்களினால் உருவாக்கப்படுகின்றன. கடினமான பாறைகளின் மேல் இந்த பூச்சிகள் நின்று கொண்டு இரை தேடும் போது இப்பூச்சிகள் உடல்களிலிருந்து உண்டாகக்கூடிய எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. இதுவே பவழம் உண்மையாக உற்பத்தியாகும் முறையாகும். பவழம் கால்சியம் கார்பனேட்டினால் ஆனது. மிகச் சிறந்த பவழம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்றும், செம்பருத்தி பூவின் நிறத்தைப் போன்றும், கோவைப் பழத்தைப் போன்றும் செந்திறமாக இருக்கும். நாம் பவழம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. வெண் பவழம் என்றால் முருங்ப்பூ போன்ற நிறத்துடன்  காணப்படும். பவழத்திற்கு ஆங்கிலத்தில் கோரல் என்று பெயர்

பவழத்தின் அமைப்பைக் கொண்டு 6 அல்லது 8 காரங்கள் உடையதென  இரு வகையாக பிரிக்கப்படுகிறது. சிவப்பு பவழமானது 8 காரங்கள் பிரிவைச் சார்ந்ததாகும். முன்பு நம் நாட்டு கடல் பகுதிகளில் பவழம் நிறைய கிடைக்கப் பெற்றது. தற்போதோ இத்தாலி மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது. பவழம் கடுமையான வேதிப் பொருளான அமிலமானது பட்டால் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது.

பவழத்திற்கு 6 குற்றங்கள் உண்டு. அப்படிப்பட்ட பவளங்கள் அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது. பவழங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ, ஓரங்கள் ஓடிந்தோ, துளைகளுடனோ, இருந்தால் அவை குற்றமுடைய பவழமாக கருதப்படும். பவழத்தில் நாள் பட்ட பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல. கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் பூமியில் விளைபவையாகும். இந்த கற்கள் பவழம் போன்ற அமைப்பை கொண்டது என்பதால் இவற்றை பவழம் என்று எண்ணிவிடக்கூடாது.

செந்நிற கிரகமான செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்களான மேஷ, விருச்சிக ராசிக்காரர்களும், எண் கணிதப்படி 9,18,27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களும் பவழத்தை அணியலாம். இதைத் தவிர மருத்துவ ரீதியாகவும் பவழத்தை அணிந்தால் இரத்த சிகப்பணுக்கள் கூடுகின்றது. உடலில் சுறுசுறுப்பும் உண்டாகிறது. செவ்வாய் தோஷமுடையவர்களும், மனத் தளர்ச்சியடைபவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறவும், நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் பவழக்கல்லை அணியலாம். பவழத்தை தங்கத்தில் பதித்து மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது.

கண்களில் பாதிப்புடையவர்கள், குடல் புண், இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய், தோல் நோய், பெண்களுக்கு உண்டாகக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் பவழக்கல்லை அணிவதால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம். பவழம் தடைகளையும் விபத்தையும் தவிர்க்கும். சண்டையையும் வெறுப்பையும் குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

Sapphire

நீலம் (Sapphire )  சனி

நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப்பொருளால் ஆனது. இக்கல்லுக்கு நீல நிறத்தைத் தருவதற்கு டைட்டானியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. ஆழ்ந்த நீல நிறமுள்ள நீலக்கல்லில் டைட்டானியம் அதிகம் இருக்கும். இதன் நிறத்தின் பெயரே கல்லின் பெயரானது. முன்பெல்லாம் உயர்தரமான நீலம் இந்தியாவில் காஷ்மீரில் கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் கிடைப்பது அரிதாகிவிட்டாலும் தாய்லாந்து, இலங்கை, கென்யா, டான்சானியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகிறது.

நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு, பளபளப்பு குன்றாமல் இருக்கும். வெளிர் நீல கற்கள் பாங்காங்கில் அடர் நீலமாக மாற்றப்பட்டு பாங்காங் நீலம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையும், சுத்தமான தன்மையும் கொண்ட கல்லை கெட்டி நீலம் என்கிறார்கள்.

பர்மா மற்றும் காஷ்மீரில் அற்புதமான நீல கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளிமிகுந்த, கண்களைக் கவரக்கூடியவையாக இருக்கும். நீலக்கல்லை அணிவதால் போட்டி, பொறாமை மற்றும். கண் திருஷ்டிகள் விலகும். மன அமைதியையும், சுகமான ஆபத்தில்லாத பயணங்களைத் தரும். இடமாறுதலையும், நாள்பட்ட துன்பங்க¬யும் போக்கும். நீலக் கல்லிலேயே  தோஷமற்ற இந்திர கல் கிடைக்கப்பெற்று அதை அணிபவர்களுக்கு ஏழ்மை விலகி செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை போன்ற யாவும் தேடி வரும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

நீலக் கல்லை நீல நிற சனி கிரகத்தின் ஆதிக்கத்திற்குள்ளோரானான மகர, கும்ப ராசியில் பிறந்தவர்களும், ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, சனி திசை போன்றவை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 8,17, 26 எண்ணில் பிறந்தவர்களும் அணியலாம்.

மருத்துவ ரீதியாகவும் வாதநோய், பாரிச வாய்பு, எலும்பு வியாதி, பல் நோய், ஜலதோஷம், சித்த சுவாதீனம், உடல் சோர்பு, மந்த நிலை போன்ற  நோய்களிலிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைக்கும்.

நீலக்கல்லை வெள்ளியில் பதித்து உடலில் படும்படி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் அணிவது உத்தமம். நீலக்கல் அணிவதால் நம்மை பிடித்துள்ள நீச குணங்கள் விலகி சனி கிரகத்தின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.

அக்கோமரின்

நீலக்கல்லிற்குப் பதிலாக இந்த அக்கோமரின் (Aguamarine) கற்களையும் அணியலாம். இதுவும் பார்ப்பதற்கு அழகாகவும், வெளிர்நீல நிறமுடையதாகவும் விலையில் சற்று குறைவாகவும் கிடைக்கின்றது.

சனியால் ஏதாவது பாதிப்பு உடையவர்கள் அக்காலங்களில் மட்டும் இக்கற்களை அணிந்து கொள்ளலாம். மற்றோர் அணிவது கூடாது. அழகுக்காக சிலர் அணிகிறார்கள். இவற்றால் கெடுபலன்களையே  அடைய நேரிடும்.

Diamond

வைரம்  Diamond

சுக்கிரனுக்குரிய கல்லான வைரத்தின் ஆங்கிலப் பெயர் டைமண்ட் ஆகும். வைரத்தைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.

நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது. வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது. மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும். சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும். ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.

இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். விலை உயர்ந்த வைர வியாபாரத்தை உலக அளவில் கட்டுப்படுத்தும் நிறுவனமாக லண்டனில் தலைமையகத்தை கொண்ட பீபர்ஸ் விளங்குகின்றது.

நம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி அணிந் கொள்கிறோம். ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும் சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15,24 ஆம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது.

வைரம் தன் மீது படும் ஒளியை முழுயாக எதிரொலிப்பு செய்வதால் வைரத்தின் வழியே எந்தவொரு பொருளையும் பார்க்க இயலாது. புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும்.  இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும. வைரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா தான் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு காலியாகி விட்டதால் ஒரிஸாவில் மீண்டும் வைரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு காரட் (0.2 கிராம்) பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் பெறுவதற்கு 30 டன் எடையுள்ள பாறை மற்றும் மணலை பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது.  அதன் பின்னர் பட்டை தீட்டி, பலர் கை மாறி மாறி விற்பனைக்கு வருவதால்தான் வைரத்தின் விலை பல மடங்காக உள்ளது. சுத்தமான வைரங்களைக் கண்டு பிடிக்க டைமண்ட் டெஸ்டர்களும் தற்போது உபயோகத்திற்கு வந்து விட்டதால் அந்த கருவியைக் கொண்டு சுத்தமான ஒளி, ஒலி அமைப்பை கண்டுபிடித்து விடலாம். வைரத்திற்கு எளிதில் வெப்பத்தை கடத்தும் தன்மை உள்ளதாலேயே மேற்கண்ட பரிசோதனையைச் செய்து போலியா, ஒரிஜினலா என கண்டறிய முடிகிறது.

வெண்மையாகவும் தீவு போன்ற வடிவம் கொண்ட வைரம் தோஷமுள்ளதானதால் இதை அணிவதால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஜிர்கான், வைரத்தை வாங்க இந்த ஜிர்கான் கற்களை வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

Cat’s Eye

வைடூரியம் Cat’s Eye கேது

வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு கேட்ஸ்அய் என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.

வைடூரியமானது மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததாகும்.  வைடூரியம் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதால், இதனை பரிசோதனைக்குப் பின்னரே அணிய வேண்டும். பெரில்லியம் அலுமினேட் எனப்படும் வேதிப்பொருளால் ஆன வைடூரியம், கிரிஸோபெரில் வகையை சார்ந்ததாகும். விலையும் அதிகமாகும். வைடூரிய கல்லின் குறுக்கே ஒரு நூல் பட்டையாகவும் தெளிவில்லாமலும், கல்லின் நிறம் வெளிர் பச்சையாகவும் இருந்தால் விலை அதற்கேற்ப குறைய வாய்ப்புண்டு.

இதில் குறிப்பிடத்தக்கது குவார்ட்ஸ் வகை வைடூரியங்கள் ஆகும். ஆனால் இதன் பெயரில் தான் வைடூரியம் உள்ளதே தவிர சுத்தமான வைடூரியம் இல்லை. எடை குறைந்த குவார்ட்ஸ் வகை வைடுரியங்கள் ப்ரவுன் கலந்து பச்சையாக இருக்கும். இதில் பழுப்பு நிறம் உடைய நூல் போன்ற அமைப்பு கொண்ட கற்களை டைகர்ஸ் ஐ (Tigers Eye) என்றும், கருப்பு நிறமாக இருந்தால் புல்ஸ் ஐ (Bulls Eye) என்றும் அழைக்கின்றனர்.

சுத்தமான வைடூரியத்தின் அழகானது, அதனுள் தெரியும் நூல் போன்ற அமைப்பு வெளிச்சத்தில் மின்னல் போல தெரிவதால் யாரையும் மயக்கிவிடும்.  மற்ற டைகர் ஐ, புல்ஸ் ஐ போன்றவற்றில் இது போன்ற கவர்ச்சியான அமைப்பு இருக்காது.

வைடூரியங்களில் நமது நாட்டில் கேரளாவில் கிடைப்பதே விலை உயர்ந்ததாகும். இது தவிர, ஒரிஸாவில் கிடைப்பது சற்று விலை குறைந்ததாக உள்ளது. பிரேசில், இலங்கை, அமெரிக்கா முதலிய இடங்களிலும் வைடூரியம் கிடைக்கின்றது.  வைடூரியக் கல்லை அணிவதால் மிகுந்த செல்வம், செல்வாக்கு உயரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாட்டை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்கள் வராது. மன நிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வைடூரியக் கல்லைத் தங்கத்தில் பதித்து ஆள் காட்டி விரல் அல்லது மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது. வைடூரியக் கல்லை கால சர்பதோஷம் உடையவர்களும், கேது திசை நடப்பில் உள்ளோரும், 7,16,25 ஆகிய எண்களில் பிறந்தோரும் அணிவது உத்தமம்.அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரக்காரர்களும் அணியலாம்.

புள்ளிகள், பள்ளங்கள், மங்கலான நிறங்கள் உடைய வைடூரியங்களால் தீமையான பலன்களை அடைய நேரிடும். எனவே  வைடூரியத்தை நன்கு பரிசோதித்து அணிவது உத்ததமம்.

ஒப்பல்

வைடூரியத்திற்கு மாற்றுக் கல்லாக ஒப்பல் என்ற கல்லை அணியலாம். ஒப்பல் கற்கள் ஏழு எண்காரர்களுக்கு மிகவும் உகந்ததாகும். இது பல வண்ணங்களில் கிடைத்தாலும் வெண்மை நிறம் கொண்ட கல்லே சிறந்ததாகும்.

Emerald 

மரகதம் Emerald  புதன்

மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.

மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை யாரும் கோவிலின் மேல் தளத்தில் ஏற்படுத்த விடுவதில்லை.

பச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23 ஆம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம்.  தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் அணிந்து கொள்ளுதல் நல்லது. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அணிவது மிகவும் சிறப்பு.

மரகதம் அணிவதன் பயன்கள்

மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேன்மை கொடுக்கும்.

மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைகின்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக  உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது.  பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை.

பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகு படுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

ஆனெக்ஸ் (Onex):

                ஆழ்ந்த நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும்.

 Hessonite

கோமேதகம்  Hessonite   ராகு

கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம்  கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு  கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும்.

தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.

சாயாகிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. ராகு எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதியின் காரகத்துவத்திற்கேற்றவாறு செயல்படுவார். ராகு நின்ற வீட்டின் அதிபதி சுபர் வீட்டில் இருந்து அவரும் சுபராக இருந்தால் கோமேதகக் கல்லை அணியலாம். அதுபோல் ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் 4,13,22,31 ஆகிய எண்ணுக்குரியவர்களும் கோமேதகக் கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது தங்கத்தில் பதித்து  மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.

கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கற்கள் இங்கேயே பட்டை தீட்டி விற்பனை செய்யப்படுகிறது.

கோமேதகத்தின் பயன்கள்

கோமேதகக் கல்லை அணிவதால் தோலில் உண்டாகக்கூடிய நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள், வண்டி, வாகனங்களில் செல்வதால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும். மற்றும் தேவையற்ற பழக்க வழக்கங்கள் விலகும். பேச்சில் நிதானமும் உண்டாகும்.

தேன் நிறத்தில் காணப்படும் ஜிர்க்கான் கற்கள் கோமேதகம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. மெல்லிய கருப்பு நிற, ஒளியற்ற தன்மை, கடினமான தட்டையான மஞ்சள் நிற கண்ணாடிக்கல் போல் தோற்றம் தருவது சராசரியான தன்மை கொண்டவைகளே. இவை சுபமானதாக கருதப்படுவதில்லை.

கோமேதகம் விலை குறைவுடையது என்பதாலும், எளிதில் கிடைக்கப்பெறுவது என்பதாலும் இதற்கு மாற்றுக் கல் தேவையில்லை. என்றாலும் ஒன்றாம் எண்ணுக்குரிய கார்னெட் கற்களை கோமேதககத்திற்கு மாற்றாக அணியலாம்.

Yellow Sapphire

கனக புஷ்ப ராகம் (Yellow Sapphire)  குரு பகவான்

கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள். தங்கம் மஞ்சள் நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் என்கிறோம். இது சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம் என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது.  சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும்.

தங்கம் கலந்தாற்போல் மஞ்சள் நிறத்துடன் காணப்படுவது கனக புஷ்பராகமாகும். இது மிகவும் ஜொலிப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது. எனவே வெள்ளை புஷ்பராகத்தைவிட மஞசள் புஷ்ப ராகம் சற்று விலை கூடுதலானது. இதை கேரட் கணக்கில் தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.

புஷ்ப ராகக் கற்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா ஆகிய இடங்களிலும், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. ஆறுகளில் அடித்து வரப்படும் கூழாங்கல் போன்ற தோற்றத்துடன் ஆற்று ஓரங்களில் கிடைக்கின்றது. புஷ்பராகக் கல் கடினத்தன்மை அதிகமுள்ளதால் நெடுநாள் உபயோகத்தாலும் பளபளப்பு குன்றாது.

யார் கனக புஷ்பராகம் அணியலாம்?

இந்த புஷ்பராகக் கல்லை 3,12, 21, 30 போன்ற எண்களில் பிறந்தவர்கள் தங்கத்தில் பதித்து ஆள்காட்டிவிரல் அல்லது மோதிர விரலில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. மற்றும் தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்களும், குரு திசை நடப்பில் உள்ளவர்களும் இந்த புஷ்பராகக் கல்லை அணியலாம். இதனால் தொழிலில் தடை, திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை போன்றவை விலகும். அசுரபரான செவ்வாயை அடக்கி செவ்வாய் தோஷத்தை விலக்கும், மஞ்சள் காமாலை போன்ற ஈரல் தொடர்பான நோய்களை போக்கும். மற்ற இயற்கை கற்களை போலவே கனக புஷ்ப ராகத்திற்கும் ஓர் அதிர்வு உண்டு. இந்த அதிர்வானது போலி கற்களுக்கு இருக்காது. குருவின் ஆதிக்கத்திலிருந்து வரும் கதிர்களை உறிஞ்சி குருவின் திருவருளை கனக புஷ்பராகம் பெற்று தருகிறது.

கனகபுஷ்பராக கல்லுக்குப் பதில் ஏமிதிஸ்ட் என்ற கல்லையும் அணியலாம். இது இந்தியாவில் இருந்தே கிடைக்கிறது. வெண் பவளத்தையும் ஓயிட் கோரல் 3ம் எண்ணின் ஆதிக்கத்தை உடையவர்கள் அணியலாம்.

ஸ்படிக வகையைச் சேர்ந்த கோல்டன் டோபஸ்ட் என்ற கல்லையும் அணியலாம். ஆனால் இது எடைகுறைவாகவும், நாளடைவில் பளபளப்பு குன்றியும் காட்சியளிக்கும்.

புஷ்பராகக் கல்லை அணியும்போது வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் 7 அல்லது 13 ரத்திகல் எடையில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. கனக புஷ்பராக கல்லானது இயற்கை அளித்த அற்புதமான பரிசாகும்.

Pearl

முத்து(Pearl) சந்திரன்

வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை.  இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்த வகை முத்துக்களை, ஆணி முத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில்  அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை Barogue pearl  என்று  கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர்.

உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுது தான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்று தான்.

இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920ஆம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக  இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.

முத்தின் நன்மைகள்

முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பபை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.

முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.

யாரெல்லாம் முத்து அணியலாம்?

முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.

முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.

முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது.