Revathi natchathira palangal
/0 Comments/in natchathira palangal /by MURUGU BALAMURUGANரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்
எழுதியவர்
முனைவர் முருகுபாலமுருகன்,
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தேழாவது இடத்தைப் பெறுவது ரேவதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது மீன ராசிக்குரியதாகும். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் தே, தோ, ச, சி ஆகியவையாகும் தொடர் எழுத்துக்கள் சா, சீ ஆகியவை.
குண அமைப்பு;
ரேவதி நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். எல்லாருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைப்பார்கள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பிறருக்கும் எடுத்து சொல்லி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குவார்கள். கையில் எந்த முதலீடும் இல்லாவிட்டாலும் இவர்களின் மூளையே மூலதனமாக இருக்கும். அழகான உடலைப்பும், வசீகரமான கண்களும் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தங்கள் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தி முந்திடுவார்கள். நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய அளவிற்கு பெரிய சாதனைகளை செய்வார்கள். அனைவரின் எண்ண ஒட்டங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். விலங்குகள் மற்றும் செடி கொடிகளின் மீது அதிக பற்றுடையவர்கள். ஜீவ காருண்யம் பார்ப்பார்கள். எவ்வளவு வயதானாலும் இளம் வயது போலவே காட்சியளிப்பார்கள். அழகிய பல் வரிசையும், சிரித்த முகமும் இவர்களுக்கு மேலும் வசீகரத்தை கொடுக்கும். சபை நாகரிகம் தெரிந்து கொள்வார்கள்.
குடும்பம்;
அழகான குண அமைப்பு, முகத்தோற்றமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் உற்றார் உறவினர்களிடம் பழகுவதை விட அந்நியர்களிடம் அன்பாக பழகுவார்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும், பாசமும் உள்ளவர்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து வளர்ப்பார்கள். மனம் தெளிந்த நீரோடை போல சுத்தமாக இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். அளவுக்கு அதிகமான இளகிய மனம் இருப்பதாக சில நேரங்களில் அதுவே ஆபத்தாக முடியும். பெற்றோர் பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தன்னுடைய பேச்சாற்றலால் உறவுகளை தன் பக்கம் வைத்திருப்பார். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது. சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டானாலும் மனம் தளர்ந்து விடுவார்கள்.
தொழில்;
முதலீடே இல்லாமல் வாழ்வில் முன்னேறக் கூடியவர்கள். ஒவியர், எழுத்தாளர், கதை கவிதைகளை படைப்பவராக இருப்பார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டேரி கிளப் போன்ற துறைகளில் உயர் பதவிகளை வகிப்பார்கள். மிகவும் தைரியசாலி என்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அரசியலில் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள். கோயில்களில் அறங்காவலர்களாகவும் இருப்பார்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் உடைய மனிதர்களாக வளம் வருவார்கள். தங்களுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியல் மேலாண்மை, குழந்தை மருத்துவம் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள். கை நிறைய சம்மாதிக்கும் யோகத்தை பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
நோய்;
இளம் வயதில் சளித் தொல்லைகள். ஜல தொடர்புடைய பாதிப்புகள் உண்டாகும். நரம்பு தளர்ச்சி ஏற்படவும் வாய்புண்டு. கல்லீரலீலும் பாதிப்புகள் உண்டாகும். குடிப்பழக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படும்.
திசை பலன்கள்;
ரேவதி நட்சத்திராபதி புதன் பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை வரும். இத்திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் திசை காலங்களில் புதன் பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல ஞாபக சக்தியும், பேச்சாற்றல் எழுத்தாற்றலும் பெரியோர்களை மதிக்கும் பண்பும் இருக்கும். பலமிழந்திருந்தால் அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பும் அதனால் மருத்துவ செலவுகளும் உண்டாகும்.
இரண்டாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக்குழப்பம் பய உணர்வு, நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு உண்டாகும்.
மூன்றவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொருளாதார மேன்மை திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு அசையும் அசையா சொத்து சேர்க்கைகள் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும். வாகன வசதி உண்டு.
நான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும், சந்திரன் 10வருடமும் செவ்வாய் 7வருடமும் நடைபெறுவதால் இத்திசைகளின் காலங்களிலும் எதிர் பார்த்த முன்னேற்றத்தினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.
ரேவதி நட்சத்திர காரர்களுக்கு ராகு திசை மாராக திசையாகும்.
விருட்சம்;
ரேவதி நட்சத்திரகாரர்களின் விருட்சம் பாலுள்ள இலுப்பை மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை நவம்பர் மாதத்தில் இரவு 12 மணிக்கு வானத்தில் காணலாம்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
ரேவதி நட்சத்தில் மஞ்சள் நீராட்டு மாங்கல் செய்தல், பூ முடித்தல், திருமணம் செய்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், மொட்டையடித்து காது குத்துதல், புதிய ஆடை ஆபரணங்களை வாங்குதல் போன்றவற்றை செய்யலாம். புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், ஆழ் குழாய் கிணறு அமைத்தல் வண்டி வாகனம் வாங்குதல், பொது சபை கூட்டுதல், புதிய வேலைக்கு சேருதல் நல்லது. சங்கீதம், நாட்டியம் கல்வி போன்றவற்றை கற்க தொடங்குவதும் நல்லது, வியாதியஸ்தர்கள் மருத்துண்ணலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
திருவனந்தபுரம்;
கேரள மாநிலத்தின் தலை நகரம். அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தல விருட்சம் இலுப்பை.
இலுப்பைப்பட்டு;
நாகை மாவட்டம் மயிலாடு துறைக்கு மேற்கே 13 கி.மீ தொலைவில் உள்ள மணல் மேடு என்ற இடத்தில் நீலகண்டேசுவரரும் அமுதவல்லியும் அருள் பாலிக்கும் ஸ்தலம்.
இரும்பை மாகானம்;
திண்டி வனத்திலிருந்து 30 கி.மீ தொலைவுள்ள கடுவெளிச்சி சித்தர் தவம் புரிந்த ஸ்தலம். தல மரம் இலுப்பை.
கூற வேண்டிய மந்திரம்;
பூஷணம் பரமம் வந்தே ரேவதிசம்
ச மீருத்யே வராபயோஜ்வயகரம்
ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்.
பொருந்தாத நட்சத்திரங்கள்
அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை மூலம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
Uthirattathi natchathira palangal
/0 Comments/in natchathira palangal /by MURUGU BALAMURUGANஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்
எழுதியவர்
முனைவர் முருகுபாலமுருகன்,
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தாறாவது இடத்தை பெறுவது உத்திரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் இனமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் மீன ராசிக்குரியதாகும். இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் து, ஞ, ச, ஸ்ரீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் யா, ஞ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
உத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசக் கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்திய சாலி. வெற்றிலை போடுவதிலும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். மனதில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்கும். யாருக்காகவும் போலியான வாழ்க்கை வாழ மாட்டார்கள். சாதுவான குணமிருந்தாலும் முன் கோபம் வந்தால் முரட்டு தனமும் வெளிப்படும். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்கள். கல்வி சுமாராகத் தானிருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான் ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். அகன்ற மார்பும் காதுகளும் இவர்களுக்கு அழகை சேர்க்கும். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
குடும்பம்;
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண் நட்புகள் அதிகமிருக்கும். காதல் வயப்பட்டாலும் குடும்ப நலன் கருதி விலகி விட நேரிடும். அமையும் மனைவியிடம் அதிக பாசமும் பிள்ளைகள் மீது அன்பும் இருக்கும். இவர்களுக்கு ஆண் பிள்ளைகளே அதிகமிருக்கும். கலச்சாரம் பண்பாடு தவறாமல் வாழ விரும்புவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தாய் மீது அதிக பாசம் இருக்கும் உணவுப் பிரியர்களாக இருப்பார்கள். இயற்கையான சூழலில் வீடுகளை அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வயதான காலத்தில் சிலர் இல்வாழ்க்கையை துறந்து துறவறத்தில் ஈடுபடுவார்கள்.
தொழில்;
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவர். தர்ம முறையில் பணம் சம்பாதிப்பார்கள். சற்று பிடிவாத குணமிருந்தாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள் 27 வயது முதல் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 51 வயதில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு நாட்டையே ஆளக் கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.
நோய்;
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொடக்க திசை சனி திசை என்பதால் ஜல தொடர்புடைய பாதிப்பு அஜீரண கோளாறு, அடிபட்டு கைகால்களில் எலும்புகளில் அடிப்பட கூடிய வாய்ப்பு உண்டாகும். கல்லீரலில் பிரச்சனை, அதிக மருந்துகள் உண்பதால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு உண்டாகும். குடிப்பழக்கமும் அதிகமிருக்கும். உடலின் கீழ்பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.
திசை பலன்கள்;
சனி திசை உத்திரட்டாதி நட்சத்திர காரர்களுக்கு முதல் திசையாக வரும். இது மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். சனி திசை காலங்களில் சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடும் குடும்பத்தில் அசையா சொத்து சேர்க்கையும் ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
இரண்டாவதாக வரும் புதன் திசை 17 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் நல்ல ஞாபக சக்தி கல்வியில் உயர்வு, பெற்றோர் பெரியோர்களின் ஆசி ஆகியவை சிறப்பாக அமையும். சுக வாழ்வு வாழ்வார்கள்.
முன்றாவதாக வரும் கேது திசை சாதகமற்றதாக இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு தேவையற்ற மனக்குழப்பங்கள், சோம்பல் தன்மை, திருமணமானவர்களுக்கு இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். நிம்மதி குறையும்.
நான்காவதாக வரும் சுக்கிர திசை இருபது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களிலும் பொருளாதார மேன்மை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் சுப காரியம் நடைபெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
விருட்சம்;
உத்திரட்டாதி நட்சத்திர காரர்களின் விருட்சம் வேப்ப மரமாகும். இம்மரமுள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 12 மணிக்கு மேல் உச்சி வானில் காணலாம்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், பூ முடித்தல் சீமந்தம், குழந்தையை தொட்டிலில் இடுதல், பெயர் சூட்டுதல், மொட்டையடித்து காது குத்துதல், முதன் முதலாக சாதம் ஊட்டுதல், கல்வி ஆரம்பித்தல், ஆடை அணிகலன்கள் அணிதல், வாகனம் வாங்குதல், மருந்து உண்ணுதல் ஆகியவற்றை செய்யலாம். வங்கி சேமிப்பு தொடங்க, நாட்டியம் பயில, புது வேலைக்கு விண்ணப்பிக்க ஆயுதம் பயில, குலம் கிணறு வெட்ட இந்த நட்சத்திரம் உகந்ததாகும்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
திருநங்கூர்;
எம்பெருமான் நின்ற கோலத்தில் நிலமகள், திருமகளோடு புருஷோத்தம பெருமாள் என்ற பெயர் கொண்டு அருள் பாலிக்கிறார். ஸ்தலத்தின் வடக்கே உள்ள திருக்குளமே திருபாற் கடலாகும். தல விருட்சம் வேம்பு.
வைத்தீஸ்வரன் கோயில்;
இந்த கோயிலும் உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களின் பரிகாரஸ்தலமாகும்.
சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் காமகா மாய வித்மஹே
ஸர்வசித்யை ச தீமஹி
தன்னோ தேனு ப்ரசோதயாத்
பொருந்தாத நட்சத்திரங்கள்
பரணி, பூசம், பூரம் அனுஷம், பூராடம், ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
Sadayam natchathira palangal
/0 Comments/in natchathira palangal /by MURUGU BALAMURUGANசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்
எழுதியவர்
முனைவர் முருகுபாலமுருகன்,
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்து நான்காவது இடத்தை பெறுவது சதய நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு அலி இனமாக கருதப்படுகிறது. இது கும்ப ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடல் பாகத்தில் முழங்கால், கணுக்கால் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் கோ, ஸ, ஸி, ஸீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் தோ, தௌ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
சதய நட்சத்திராதிபதி ராகுபகவான் என்பதால் உடல் வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்கள். அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் உண்மையாக பழகுவார்கள். நல்ல அறிவாளியாகவும் நேர் வழியில் பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். தெளிவாக பேசுபவர்களாகவும், கேளிக்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பகைவர்களை ஒட ஒட விரட்டுவார்கள். எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பார்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவம் இருந்தாலும் நேரம் பார்த்து அடி கொடுப்பார்கள். பிறர் சொத்துகளுக்கு ஆசைபட மாட்டார்கள். ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். எல்லாருக்கும் உதவக் கூடிய குணம் இருப்பதால் சொத்தை கூட விற்க வேண்டி வரும். கொடுத்த வாக்கை பிச்சை எடுத்தாவது காப்பாற்றி விடுவார்கள். மனிதாபி மானம் மிக்கவர்கள். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.
குடும்பம்;
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவிக்கு அடங்கி நடப்பது போலும் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போலும் தோன்றினாலும் தட்ட வேண்டிய நேரத்தில் தட்டி விடுவார்கள். உடன் பிறந்தவர்களுக்காகவும், பெற்றோருக்காகவும் உற்றார் உறவினர்களுக்காகவும் எதையும் தியாகம் செய்வார்கள். தன் சொத்தையே விற்று போண்டியாகி நிற்பார்கள். ஆனால் இவர்கள் வைத்திருக்கும் பாசத்தைப் போல அவர்களும் இருப்பார்களா? என்றால் வாங்கும் வரை வாங்கி விட்டு பின்பு ஒதுக்கி தள்ளி விடுவார்கள். எனவே இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பெண்களால் அதிகம் விரும்ப படுவராக இருப்பதால் சில நேரங்களில் தடம் மாறவும் வாய்ப்பபுண்டு. 18 வயது வரை வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்தாலும் படிப்படியாக முன்னேறி வாழ்வின் உச்சியை அடைவார்கள். சமுதாயத்தில் ஒரு முக்கிய மனிதராக இருப்பார்கள்.
தொழில்;
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன் சுய சிந்தனையுடன் செயல்படுவார்கள் கற்றறிந்தவர்களின் சொல்படி நடப்பார்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற பெரிய குறிக்கோளுடன் செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று லாபம் சம்பாதிப்பதுடன் பல சாதனைகளையும் செய்வார்கள். ஆரம்பத்தில் உத்தியோகம் செய்யவராக இருந்தாலும் 39 வயது முதல் சொந்த காலில் நின்று சுய தொழில் புரிவார்கள். பைலட், தொழிலதிபர்கள், தொழில் சங்க தலைவர்களாக இருப்பார்கள். சிலர் ஸ்டீல் கார் தொழில்சாலை, சாயப்பட்டறை, பனியன் கம்பெனி, விமான நிலையம் கட்டுவது, கடலுக்குள் பாலம் கட்டுவது போன்ற துறைகளில் சாதிப்பார்கள். கனரகங்களை விற்பது, அனல் மின் நிலையம் கட்டுவது மேம்பாலம் போடுவது, சாலை அமைப்பது போன்றவற்றில் திறமையாக செயல்பட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
நோய்;
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று முன் கோபம் அதிகமிருக்கும். இதனால் இதய துடிப்பு அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். ஹார்ட் அட்டாக்கும் வரலாம். தோல் நோய்களும் ஏற்படும்.
திசை பலன்கள்;
சதய நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசையின் மொத்த காலங்கள் 18 வருடங்கள் என்றாலும், பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்து விட்டால் கல்வியில் ஈடுபாடும் நல்ல நடத்தையும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் பெரியோர்களை மதிக்காத நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை, பாவ சொற்களை பேசும் அமைப்பு உண்டாகும்.
இரண்டாவதாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு பெருமையும் சேரும். குடும்ப சூழலும் சிறப்பாக அமையும்.
மூன்றாவதாக வரும் சனிதிசை காலங்கள் 19 வருடங்களாகும். இத்திசை காலங்களில் பொருளாதார உயர்வும் அசையா சொத்து சேர்க்கையும், பழைய பொருட்களால் அனுகூலமும், வேலையாட்களின் ஆதரவும் கிட்டும்.
நான்காவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் பூர்வீக வழியில் அனுகூலமும், பிள்ளைகளால் மேன்மையும் கிட்டும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள்.
ஐந்தாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறுவதால் ஏற்ற இறக்கமான பலன்களை அடைய முடியும்.
விருட்சம்;
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஸ்தல விருட்சம் கடம்ப மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 11 மணி அளவில் உச்சி வானத்தில் காணலாம்.
சதய நட்சத்தரத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
திருமணம், குழந்தைக்கு பெயர் வைத்தல், கல்வி கற்க ஆரம்பித்தல், கிரக பிரவேசம் செய்தல், வீடு கட்டுதல், ஆடு மாடு வாங்குதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல் போன்றவையாகும்.
வழி பாட்டு ஸ்தலங்கள்
பிச்சாண்டார் கோயில்;
திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6 கி.மீ தொலை உள்ள உத்தமர் கோயில், பிரம்மா சரஸ்வதிக்கு தனி சன்னதி உள்ளது.
கடம்பர் கோயில்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள தட்சிண காசியில் கடம்பவனநாதராக ஈசன் முலையம்மையோடு காட்சி தரும் ஸ்தலம்.
கூடல்;
மதுரை மாநகரில் உள்ள வைணவ திவ்ய தேசம். அஷ்டாங்க விமானத்தில் வீற்றிருந்த நின்ற மற்றும் சூரிய நாரயணன் 3 கோலங்களில் காட்சியளிக்கிறார்.
கடம்பனூர்;
முருக பெருமான் ஐந்து ஸ்தலங்களில் சிவ பிரதிஷ்டை செய்ய வழிபட்ட கோவில் கடம்பனூர், பெருங்கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளம் கடம்பனூர், வாழிக்கடம்பனூர் ஆகியவையாகும். இத்தலங்களில் முருகன் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.
கூற வேண்டிய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முஷீயமாம்ருதாத்
பொருந்தாத நட்சத்திரங்கள்
ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி.திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
Poorattathi natchathira palangal
/0 Comments/in natchathira palangal /by MURUGU BALAMURUGANபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்
எழுதியவர்
முனைவர் முருகுபாலமுருகன்,
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தைந்தாவது இடத்தை பெறுவது பூரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். பூரட்டாதி நட்சத்திரத்தின் 1,2,3-ம் பாதங்கள் கும்ப ராசிக்கும் 4-ம் பாதம் மீன ராசிக்கும் சொந்தமானதாகும். இதில் 1,2,3ம் பாதங்கள் கணுக்கால்களையும், 4-ம் பாதம் கால், முன்னங்கால்களையும் ஆளுமை செய்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஸே, ஸோ, தா, தீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் நோ, நௌ ஆகியவையாகும். இது ஆண் இனமாக கருதப்படுகிறது.
குண அமைப்பு;
பூரட்டாதி நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் நியாய அநியாயங்களை தைரியமாக எடுத்துரைப்பார்கள். தொலை நோக்கி சிந்தனை அதிகம் என்பதால் எப்பொழுதும் ஏதாவது சிந்தனை செய்து கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். முன்கோபியாக இருந்தாலும் பரந்த மனம் இருக்கும். தன்னை பற்றி குறை கூறுவதை பொறுத்து கொள்ள மாட்டார்கள். எந்த பிரச்சனைகளையும் ஞாயமாக தீர்த்து வைப்பார்கள் உணர்வுகளை அடக்கி ஆளக்கூடிய திறன் கொண்டவர்கள். நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் இருக்கும். பால், நெய், தயிர், போன்றவற்றை விரும்பி உண்பார்கள். அப்பாவி பிழைக்க தெரியாதவர் என பலர் நினைத்தாலும் சாதுர்யமாக பேசி பொருள் பட ஈடுபடுவார்கள். எல்லாம் தெரிந்தாலும் எதையும் வெளிகாட்டி கொள்ளாமல், பிறர் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தாலும் சமூகத்தின் மீது பற்றுடையவர்கள் காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ளாமல் பழைய விதி முறைகளையே பின்பற்றுவார்கள். யாருக்கும் தொந்தரவு தாரத இளகிய மனம் கொண்டவர்கள்.
குடும்பம்;
பூரட்டாதி நட்சத்திர காரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரை இல்லாதவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது இவர்களுக்கு தாமரை இலையில் தண்ணீர் போலத்தான் பட்டும் படாமல் இருக்கும். வாழ்க்கையில் பற்றுதல் குறையும். பிள்ளைகள் மீது அதிக பாசம் இருக்கும். தாய் தந்தைக்கு ஏற்ற மகனாகவும், சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள். யாருடைய சொத்துக்கும் ஆசைபடமாட்டார்கள். அது போல தங்களுடைய சொத்தையும் யாருக்கும் விட்டு கொடுக்கும் மாட்டார்கள். சிறு வயதிலேயே பெரிய அனுபவங்களையும், கசப்பான சம்பவங்களையும் சந்திக்க நேரிடும். ஆடை அணிகலங்சளை விரும்பி அணிவார்கள். வீண் செலவுகள் செய்ய மாட்டார்கள். ஞான அறிவாற்றல் அதிகம் இருக்கும்.
தொழில்;
பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் துறவறம், ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர்கள். 26 வயது வரை கஷ்டங்களை சந்தித்தாலும் 27 வயது முதல் பல வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் உயர்வடையும். கல்வி ஆசிரியர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், பலர் கல்லூரி பள்ளி போன்றவற்றை நிர்வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சங்கங்கள் வைத்து நடந்துவார்கள். இசை, இலக்கியத்தில் ஈடுபாடும், மதம் சார்ந்த கல்வி துறைகளிலும் பொதுப்பணி தலைவர்களாகவோ பணிபுரிவார்கள். பணம் புரளும் இடம், தங்கம் விற்குமிடம் எக்ஸிகியூட்டில் துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். விளையாட்டு துறையில் சிறந்த வீரர்கள் என்பதால் அதிலும் பரிசுகளையும், லாபங்களையும், பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.
நோய்கள்;
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பவர்களாதலால் நோய்கள் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை. வந்தால் கால் முட்டுகளில் வலி வந்து மருத்துவ செலவினை உண்டாக்கும்.
திசை பலன்கள்;
பூரட்டாதி நட்சத்திராதிபதி குருபகவான் என்பதால் முதல் திசையாக குரு திசை வரும் இத்திசையின் மொத்த காலங்கள் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இளம் வயதிலேயே சுப கிரக திசை வருவதால் கல்வியில் முன்னேற்றமும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.
இரண்டாவதாக 19 வருட காலங்கள் சனி திசை நடைபெறும். இத்திசை காலங்களில் அசையா சொத்து சேர்க்கை, பூமி மனை வாங்கும் யோகம், வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். மக்களின் செல்வாக்கும் கிட்டும்.
மூன்றாவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
நான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் ஆரோக்கியத்திலும் பாதிப்பு உண்டாகும்.
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும் பிள்ளைகளால் பெருமைகளும், பொன்,பொருள் சேரும் யோகமும், சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பும் உண்டாகும்.
விருட்சம்;
பூரட்டாதி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள தேமா மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை அக்டோபர் மாதத்தில் 12 மணிக்கு மேல் தலைக்கு மேல் காண முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
வண்டி வாகனம் வாங்குதல், கடன்களை தீர்த்தல், விக்கிரங்களை பிரதிஷ்டை செய்தல், மந்திரம் ஜெபிப்பது, மந்திர உபசேம் செய்வது நல்லது, கிணறு வெட்டுவது, மரகன்று நடுவது, செங்கல் சூளையிடுவது நல்லது.
வழிபாட்டு ஸ்தலங்கள்
திருக்கோளிலி;
எனப்படும் திருக்குவளை ஸ்தலம். தஞ்சை மண்டலத்திலுள்ள ஏழ சிவ தலங்களில் ஒன்று நவகிரகங்களின் குற்றங்களை பொறுத்து அருள் செய்ததால் கோளிலி நாதர் என்ற பெயர் பெற்றவர். இக்கோயில் நவகிரகங்களின் பரிகார ஸ்தலமாகவும் உள்ளது.
சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம்
யஷாய குபேராய
வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
தன தான்ய ஸம்ருத்திம் மே
தேஹிதாபய ஸ்வாஹா!
பொருந்தாத நட்சத்திரங்கள்
கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம் உத்திராடம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
Avittam natchathira palangal
/0 Comments/in natchathira palangal /by MURUGU BALAMURUGANஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்
எழுதியவர்
முனைவர் முருகுபாலமுருகன்,
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்மூன்றாவது இடத்தை பெறுவது அவிட்ட நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதில் 1,2 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும் 3,4 ஆம் பாதங்கள் கும்ப ராசிக்கும் சொந்த மானதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் க, கி, கு, கூ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஞ, ஞா, கே ஆகியவைகளாகும்.
குண அமைப்பு
அவிட்டம் செவ்வாய் பகவானின் நட்சத்திரம் என்பதால் பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். பிறருடைய முகத்தை நேருக்கு நேர்ப் பார்த்து பேசுவார்கள். மெதுவாக நடப்பார்கள், ஆடை ஆபரணங்கள் மீது அதிக விருப்பம் உடையவர்கள். தன் பேச்சாற்றலால் எதிரிகளை ஒட ஒட விரட்டுவார்கள். அழகும் அறிவும் நிறைந்தவர்கள். மற்றவர்களின் சொத்துக்கு ஆசை படாதவர்கள். அடுத்தவர் தன்னைபற்றி விமர்சனம் செய்தாக பொருத்து கொள்ள மாட்டார்கள். உலகமே தலை கீழாக கவிழ்ந்தாலும் அஞ்சாமல் இருப்பார்கள். அடுத்தவர்களின் உதவியை எதிர் பார்க்க மாட்டார்கள். ஜாதி, இனம், மொழி மீது அதிக பற்றுதல் இருக்கும். மதியாதவர்களின் வாசற்படியை கூட மதிக்க மாட்டார்கள். வலிய சண்டைக்கு போகாவிட்டாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். அனாவசியமாக பிறருக்கு செலவு வைக்கவும் மாட்டார்கள், தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் போராடி வெற்றி பெற கூடியவர்கள். அனுபவ அறிவாளி மற்றவர்களுக்கும் வழி காட்டுவார்கள். அவிட்டத்தில் பிறந்தவர்கள் தவிட்டு பானையிலும் தங்கம் எடுப்பார்கள். செல்வாக்கும் சேரும்.
குடும்பம்;
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோர், சகோதரர் என கூட்டாக வாழ்வதில் ஆர்வம் காட்டுவார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்க தவறாக முன்கோபிகள். தாய் தந்தையை ஆயுள் காலம் வரை பேணி காப்பார்கள். கோபமிருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பதற்கேற்ப குடும்பத்திலுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்கள். உற்றார் உறவினர்களை விட மற்றவர்கள் மீது அதிக பாசம் இருக்கும். யாரையும் சார்ந்து வாழ பிடிக்காதவர்கள் சமூக சீர்திருத்த வாதியாகவும் மூட நம்பிக்கைகளை வேரோடு கலைபவர்களாகவும் இருப்பார்கள். பகட்டான வாழ்க்கையும், பஞ்சு மெத்தை உறக்கமும் இவர்களுக்கு பிடிக்காது. இலவசம் பொருட்களை வாங்க மாட்டார்கள். பொய் பேசுபவர்களை கண்டால் பொங்கி எழுவார்கள்.
தொழில்;
அவிட்ட நட்சத்திர காரர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவார்கள். பூமி மீது தீராத மோகம் உண்டு. பலர் நாட்டை காக்கும் ராணவ படைகளில் அதிகாரிகளாக விளங்குவார்கள். காவல் துறையிலும், சமூகத்தை காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவார்கள். கடின உழைப்பை விரும்புவார்கள். முத்து பவழம் போன்றவற்றிலும் லாபம் பெறுவார்கள். விளையாட்டு துறைகளிலும் அதிக ஆர்வம் இருக்கும். மாநில அளவில் பல பரிசுகளை தட்டி செல்வார்கள். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். 22 வயது வாழ்வில் போராட்டங்களை சந்தித்தாலும் 37 வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவார்கள். அரசியலிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். அடிமைத்தனம், மூடநம்பிக்கை இவற்றிலிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற்ற மடைவார்கள்.
நோய்கள்;
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, கை கால்களில் வலியும் நரம்புகளில் பிரச்சனையும், இருதய சம்மந்தப்பட்ட ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படும். மயக்கம், தலைசுற்றல், இருதய துடிப்பு அதிகமாதல் போன்றவற்றாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
திசைப் பலன்கள்;
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திராதிபதி என்பதால் முதல் திசையாக வரும் செவ்வாய் திசையின் காலங்கள் 7 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். சிறு வயது என்பதால் உஷ்ண சம்மந்த பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும்.
இரண்டாவதாக வரும் ராகு திசை காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையும், பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும், பெற்றோர் சொல் கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்.
மூன்றாவதாக வரும் குரு திசை காலங்களில் சற்று கல்வியில் உயர்வும் திருமண சுப காரியம் நடைபெறும் அமைப்பும் கொடுக்கும். 16 வருடம் நடைபெறும் குரு திசை காலங்கள் ஏற்ற இறக்கமும் நிறைந்தாக இருக்கும்.
நான்காவதாக வரும் சனி திசை காலங்களில் பல முன்னேற்றங்கள் பொருளாதார மேன்மைகள் உண்டாகும் என்றாலும், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சனி ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். உடனிருப்பவர்களாலும் தொழிலாளர்களாலும் அனுகூலம் கிட்டும். பழைய இரும்பு பொருட்களாலும் லாபங்கள் கிடைக்கும்.
விருட்சம்;
அவிட்ட நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் வன்னி மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை ரிஷப லக்னம் உதயமாகி அரை நாழிகை சென்று செப்டம்பர் மாதத்தில் இரவு 11 மணிக்கு வானத்தில் காண முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
அவிட்ட நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம் உபநயனம், குழந்தைக்கு மொட்டையடித்தல் காது குத்துதல் பெயர் வைத்தல் பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். மருந்துண்பது, வண்டி வாகனம் வாங்குவது பயணங்கள் மேற் கொள்வது ஆகியவற்றையும் செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
திருவான்மியூர்;
சென்னைக்கு தெற்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை ஸ்தலம். வன்மீகர், மருந்தீஸ்வரர், பால் வண்ண நாதர் என்ற பெயர்களுடன் ஈசன் அமைந்த ஸ்தலம் அன்னை திரிபுர சுந்தரி.
திருகாட்டுப்பள்ளி;
தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ தொலைவில் அக்னீஸ்வரர் அருள் புரியும் ஸ்தலம்.
கொடுமுடி;
பாண்டி கொடுமுடி என்று அழைக்கபடும் கொங்கு நாட்டில் மகுடேஸ்வரர் சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.
திருப்பூந்துருந்தி;
திருவையாருக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புஷ்பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.
கூற வேண்டிய மந்திரம்
ச்ரவிஷ்டா தேவதா; வந்தே
வஸிந் ரதவராஸ்ரிதான்!
சங்கம் சக்ராங்கிதகரான்
க்ரீ டோஜ்வல மஸ்தகான்!!
பொருந்தாத நட்சத்திரங்கள்
மிருக சீரிஷம், சித்திரை அவிட்டம் நட்சத்திரங்கள் பொருந்தாது.
Thiruvonam natchathira palangal
/0 Comments/in natchathira palangal /by MURUGU BALAMURUGANதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்
எழுதியவர்
முனைவர் முருகுபாலமுருகன்,
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்ரெண்டாவது இடத்தை பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும். இதன் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இது மகர ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடலில் தொடை, தொடை எலும்பு சுரப்பிகள், முட்டிகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் ஜீ, ஜே, ஜோ, கா ஆகியவை தொடர் எழுத்துக்கள் க,கா,கி,கீ ஆகியவை.
குண அமைப்பு;
திருவோணம் நட்சத்திராதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வல்லல் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் இதமாக பேசி பழகுவார்கள். ஒணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்தவொரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொருத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளையே விரும்பி அணிவார்கள்.
குடும்பம்;
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களால் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். மனைவி மீதும் தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். 16 வயது முதல் 23 வயது வரை தேவையற்ற நட்பால் பாதை மாறக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்ற மடைவார்கள். நீண்ட தலை முடியும், அழகிய முகமும் இருக்கும். சில நேரங்களில் முன்னுக்கு முரணாக பேசுவதால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஆடை ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். மனைவிக்கு பயந்து நடப்பதுடன் அவள் மீது அதிக பாசமும் வைத்திருப்பார்கள், பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்கள். நவீன ரக வீட்டு பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். குடும்பத்தின் ஆதரவை பெற்று சீரும் சிறப்பாக வாழ்வார்கள் உறவினர்களையும் நேசிப்பார்கள்.
தொழில்;
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர்களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில் நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஒவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள். 24 வயதிலிருந்து நல்ல மாற்றங்களும் வசதியான வேலை, நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.
நோய்;
திருவோண நட்சத்திரகாரர்களுக்கு அடிக்கடி உடல் நிலையில் ஜல தொடர்புடைய பாதிப்புகள் சிறுநீரக கோளாறு உண்டாகும். மனக்குழப்பங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநிம்மதி குறையும். சிலருக்கு பரம்பரை வியாதிகளான சர்க்கரை வியாதி ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.
திசைப் பலன்கள்;
திருவோண நட்சத்திரதிபதி சந்திரன் என்பதால் முதல் திசையாக வரும் சந்திர திசையின் மொத்த காலங்கள் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகளும், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.
இரண்டாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.
மூன்றாவதாக வரும் ராகு திசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்க மானப் பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.
நான்காவதாக வரும் குரு திசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.
ஐந்தாவதாக வரும் சனி திசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயரும் உண்டாகும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசற்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.
விருட்சம்;
திருவோண நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை செப்டம்பர் மாதம் இரவு 9.30 மணிக்கு மேல் உச்சியில் காணலாம்.
பரிகார ஸ்தலங்கள்
திருமுல்லைவாயில்;
சென்னைக்கு மேற்க்கில் ஆவடியை ஒட்டியுள்ள ஸ்தலம் மாசில மணீசுவரர்&கொடியிடை நாயகி அருள் பாலிக்கும் எருக்கல் செடியை தல விருட்சமாக கொண்ட ஸ்தலம்
எருக்கத்தம் புலியும்;
கடலூர் மாவட்டம் விருதாசலத்திற்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள ராஜேந்திர பட்டினம் என்ற எருக்கத்தம் புலியூரில் நீல கண்டேசு வரும் நீலமலர் கண்ணி அம்பிகையும் அருள் பாலிக்கும் திருத்தலம்.
கூறவேண்டிய மந்திரம்
சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
ச்ரவண நட்சத்திர வல்லடம்
விஷணும் கமலபத்ராஷம்
தீயா யேத் கருட வாகனம்
பொருந்தாத நட்சத்திரங்கள்
ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் பொருந்தாது.
Uthiraadam natchathira palangal
/0 Comments/in natchathira palangal /by MURUGU BALAMURUGANஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்
எழுதியவர்
முனைவர் முருகுபாலமுருகன்,
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தோறாவது இடத்தை பெறுவது உத்திராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசிக்கும், 2,3,4 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும் சொந்தமானதாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் 1&ம் பாதமானது உடல் உறுப்பில் தொடை, தொடை எலும்பு போன்றவற்றையும் 2,3,4&ம் பாதங்கள் தோள், முட்டிகள் போன்றவற்றையும் ஆளுமை செய்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் பே, போ,ஐ,ஜி ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஒ, ஓ ஔ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
உத்திர நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்கள். இந்த உலகத்தில் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பேச்சில் பதிலடி தர தயங்க மாட்டார்கள் சமூக நலனுக்காக பாடுபடும் குணம் உடையவர்களாதலால் விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பாடுபடுவார்கள். நல்ல அறிவாளி, கோபித்தும் கொஞ்சியும் தனது காரியங்களை சாதித்து கொள்வார்கள். மன வலிமையும், வைராக்கியமும் உடையவர்கள். எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திற்கு நடுவில் இருப்பார்கள். செய்த நன்றியை மறக்க மாட்டார்கள். கண்ணால் கண்ட உண்மைகளை மறக்காமல் பேசுவார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்பதற்கேற்ப நிலம், பூமிகளை வாங்கி சேர்ப்பார்கள். வயோதிக வயதிலும் இளமை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். தான தர்மங்கள் செய்து அனைவருக்கும் நல்லவராய் நடப்பார்கள்.
குடும்பம்;
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். உற்றார் உறவினர்களாலும் நற்பலன் கிட்டும். அனைவருக்கும் உதவி செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவர். 22 முதல் 26 வயது வரை ஒரு சில தடுமாற்றமும் குழப்பமும் வாழ்வில் ஏற்பட்டாலும் 40 வயது முதல் பொருளாதார ரீதியாக அதிரடி முன்னேற்றம் உண்டாகும். சகிப்பு தன்மையும் விட்டு கொடுக்கும் சுபாவமும் இளமையிலேயே இருக்கும். அகங்காரம் அதிகமிருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும். குடும்பத்தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். அனைவரும் மெச்சும்படி வாழ்வார்கள்.
தொழில்;
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்று தேர்ந்திருப்பார்கள். சமுகநலப் பற்று உடையவர்கள். மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியும் போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாக கொண்ட தொழில், மந்திர தந்திரம், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். நீச்சல் போட்டிகளிலும் மிளிர்வார்கள். இராணுவத்தில் படை தலை வகிப்பார்கள் பலருக்கும் பயிற்சி அளிப்பார்கள். எக்ஸி கியூட்டில் ஆபிசர்களாவும், கோயில் மற்றும் தேவ ஆலயங்கள், தர்கா போன்றவற்றிலும் சமூக சேவை செய்வார்கள். நீதி மன்றங்களில் திறமையாக வாதடும் வக்கீல்களாகவும் இருப்பார்கள். பொருளாதார ரீதியாக எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. நாட்டில் எங்கு தவறு நேர்ந்தாலும் அதை தயங்காமல் கேட்கும் குணம் கொண்டவர்கள்.
நோய்;
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கண் நோய், பல் நோய், முதுகு தண்டில் பிரச்சனை, சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்படும். தோல் நோய் தொழு நோய், பால்வினை நோய்கள், இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனை, இதய நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும்.
திசை பலன்கள்;
உத்திராட நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும் இதன் மொத்த காலங்கள் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இத்திசை காலங்களில் சூரியன் பலம் பெற்றிருந்தால் தந்தைக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷமும், உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு உண்டாகும்.
இரண்டாவதாக வரும் சந்திர திசை 10 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பழமிழந்திருந்தால் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்படும்.
3 வதாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களிலும் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.
நான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பல வகையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.
ஐந்தாவதாக வரும் குரு திசையும் 6 தாக வரும் சனி திசையும் நல்ல மேன்மைகளை ஏற்படுத்தி வாழ்க்கை வளம் பெறும்.
விருட்சம்;
உத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தினை ஆகஸ்டு மாதம் இரவு பதினோரு மணியளவில் வானில் காணலாம்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
உத்திராட நட்சத்திரத்தில் நிச்சியதார்த்தம், திருமணம், சீமந்தம், குழந்தையை தொட்டிலிடுதல் குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெயர் சூட்டுதல் அன்னம் ஊட்டுதல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். புது மனை புகுதல், வீடு வாகனம் வாங்குதல், வாஸ்துப் படி வீடு கட்டுதல் வான், நீர், நில வழி பயணங்கள் மேற்கொள்ளுதல், வங்கி கணக்கு தொடங்குதல், வியாபாரம், புதுவேலையில் சேருதல், நாட்டிய அரங்கேற்றம் பத்திர பதிவு, உயில் எழுதுதல் போன்ற நல்ல காரியங்களை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.
வழி பாட்டு ஸ்தலங்கள்
கோயம்பேடு;
சென்னைக்கு மேற்கே 8.கி.மீ தொலைவிலுள்ள குறுங்காலீசுவரர் தர்சம் வர்த்தனி அருள் பாலிக்கும் திருக்கோயில்.
பேளுர்;
சேலத்துக்கு கிழக்கே 32 கி.மீ தொலைவிலுள்ள தான் தோன்றீசுவரர் அறம் வளர்த்த அம்மையுடன் காட்சி தரும் ஸ்தலம்.
திருப்பூவனூர்;
மன்னார் குடிக்கு வடக்கே 10 கி.மீ தொலைவில் வல்லப நாதர் கற்பக வல்லி ராஜராஜேஸ்வரியுடன் காட்சி தரும் ஸ்தலம்.
காங்கேயநல்லூர்;
காட்பாடிக்கு தென் கிழக்கே 4.கி.மீ காங்கேசுவரர்& பால குஜாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்.
திருப்பூவணம்;
மதுரைக்கு கிழக்கே 19 கி.மீ தொலைவிலுள்ள பூவண நாதர் சௌந்தர நாயகியோடு அருள் பாலிக்கும் ஸ்தலம்.
திருஇன்னம்பூர்;
கும்ப கோணத்துக்கு வடமேற்கே 6 கி.மீ தொலைவிலுள்ள நாதேசுவரர் அன்னை குந்தளாம்பிகை உள்ள ஸ்தலம்.
திருகடிக்குளம்;
திருத்துறைப் பூண்டிக்கு தெற்கே 12 கி.மீ தொலைவிலுள்ள கற்பக நாதர் அன்னை சௌந்தர நாயகி காட்சி தரும் ஸ்தலம்.
திருக்கோஷ்டியூர்;
சிவகங்கையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள வைணவ ஸ்தலம்.
சொல்ல வேண்டிய மந்திரம்
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை தினமும் கூறலாம்.
பொருந்தாத நட்சத்திரங்கள்
புனர் பூசம், உத்திரம், விசாகம், கிருத்திகை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
Pooraadam natchathira palangal
/0 Comments/in natchathira palangal /by MURUGU BALAMURUGANபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்
எழுதியவர்
முனைவர் முருகுபாலமுருகன்,
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபதாவது இடத்தை பெறுவது பூராட நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூராட நட்சத்திரம் தனுசு ராசிக்குரியதாகும். இது உடல் பாகத்தில் தொடை, இடுப்பு, நரம்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் பூ, த, ப, டா ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஸ, எ, ஏ ஆகியவையாகும்.
குண அமைப்பு;
பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். ஆடை ஆபரணங்களை அணிவதிலும் ஆர்வம் இருக்கும். தங்களுடைய கனிவான பார்வையால் அனைவரையும் தன் வசம் வைத்திருப்பார்கள். பூராடம் போராடும் என்ற கூற்றிற்கேற்ப எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்படாமல் எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள். எந்த வொரு விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் கூட ஒரு நளினம் இருக்கும். பூராடத்தில் நூலாடாது என்ற பழமொழி இருந்தாலும் இது தவறானதாகும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் நூல் என்பதை பாட நூலாக கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும்.
குடும்பம்;
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சரியான ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே நல்லது. சிலருக்கு மறுமண அமைப்பு கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் மீது அதிக பாசம் இருக்கும். அவர்களுக்காக வாழ்க்கை துணையையே ஒதுக்கி விடுவார்கள். சுவையான உணவை விரும்பி உண்பார்கள். தாய் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். பொய் சொல்லாதவர்கள். பெற்றோரின் ஆசைகளை தடையின்றி பூர்த்தி செய்வார்கள். நண்பர்களை தங்கள் பக்கம் வைத்திருப்பார்கள். பூராடம் நூலாடாது என்பதற்கும் மணவாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை. அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையை கண்டால் மனதை பறி கொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். அனைவரையும் முழுமையாக நம்பினாலும் அனுபவத்திற்கு பிறகு சரியாகி விடும்.
தொழில்;
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் இருக்கும். கணக்கு வணிகவியல், பொது மேலாண்மை, துப்பறிதல், நீதி, மக்கள் தொடர்பு, பேஷன் டெக்னாலஜி, தொலை தொடர்பு, சற்று சூழல் ஆகிய துறைகளில் சம்பாதிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்பவராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாத நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவார்கள். ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகி அனைத்து திறமைகளையும் வெளிபடுத்தி செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். அயல் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டு. அரசியலிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.
நோய்கள்;
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தைராய்ட், சிறுநீரகக் கல் வயிற்றுப் புண், கீல் முட்டு வாதம், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும். ஜீரண கோளாறு, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
திசை பலன்கள்;
பூராட நட்சத்திரதில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் முதல் திசையாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்களாகும். என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் வாழ்வில் சுபிட்சம், கல்வியில் மேன்மை, சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், சுக வாழ்வு பாதிப்படையும்.
இரண்டாவதாக வரும் சூரிய திசை காலங்கள் 6 வருடமாகும். இத்திசையில் சிறு சிறு உஷ்ண சம்மந்தம்ப் பட்ட பாதிப்புகள் ஏற்பட்டாலும், கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். பேச்சாற்றல் ஏற்படும்.
மூன்றாவதாக வரும் சந்திர திசையில் குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.
நான்காவதாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும்.
அடுத்து வரும் ராகு திசை 18 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் முற்பாதி முன்னேற்றத்தையும், பிற்பாதியில் பாதிப்புகளையும் உண்டாக்கும். எதிலும் கவனம் தேவை. மாரக திசையாக அமையும்.
விருட்சம்;
பூராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள வஞ்சி அல்லது நாவல் மரமாகும். இந்த நட்சத்திரத்தை மீன லக்னம் உதயமாகி ஒன்றரை நாழிகை கடந்த பின்னர் வானத்தில் காண முடியும் ஆகஸ்ட் மாதத்தில் இரவு 10 மணியளவில் தென்படும்.
செய்ய வேண்டிய நற்காரியங்கள்
ஆடு மாடு கன்று வாங்குதல், வண்டி வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல், கடன்களை பைசல் செய்தல், மருந்து உண்ணுதல், பரிகார பூஜை செய்வது, கிணறு குளம் வெட்டுதல் போன்றவற்றை செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
சிதம்பரம்;
கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்தலம், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயத்தை குறிக்கும். சிதம்பர ரகசியம் இங்கே விஷேசம், சபாநாயகராக அருள் பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவ காம சுந்தரியும் அருள் பாலிக்கிறார். பழமையும் பெருமையும் நிறைந்த புண்ணிய ஸ்தலம்.
நகர்;
திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம் அப்பிரதீசுவரர் அருளாசி செய்யும் அற்புத ஸ்தலம்.
கடுவெளி;
தஞ்சை மாவட்டம் திருவை யாருக்கு வடக்கில் 3.கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ளது. ஆகாச புரீசுவரர் அருள் புரியும் ஸ்தலம்.
கூற வேண்டிய மந்திரம்
ஒம் பஸ்சிமேசாய வித்ம ஹே
பாசஹஸ்தாய தீமஹி
தந்நோ வருண ப்ரசோதயாத்!!
பொருந்தாத நட்சத்திரங்கள்
பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை பூராட நட்சத்திரத்திற்கு பொருந்தாது
Interesting links
Here are some interesting links for you! Enjoy your stay :)Pages
Categories
- Astrology
- Birth Date palan
- Daily Tamil Rasipalan
- Gen stones
- guru peyarchi palangal 2018 2019
- Guru peyarchi palangal 2018-2019
- guru peyarchi palangal 2019-2020
- Monthly rasipalan
- natchathira palangal
- New year rasi palan – 2018
- New year rasi palan – 2019
- New year rasi palan 2020
- Ragu ketu palanagal 2020 2022
- Rasi palan
- Sani peyarchi 2017 to 2020
- Sani peyarchi 2020 to 2023
- Tamil Good Times and Bad Times
- Tamil New year palangal 2018 19
- Tamil New year palangal 2019-20
- Tamil New year palangal 2020-21
- Uncategorized
- Vaara rasi palan
- Vasthu
- Weekly rasi palan
- Yagam
- ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020
Archive
- January 2021
- October 2020
- September 2020
- August 2020
- July 2020
- June 2020
- May 2020
- April 2020
- March 2020
- February 2020
- January 2020
- December 2019
- November 2019
- October 2019
- September 2019
- August 2019
- July 2019
- June 2019
- May 2019
- April 2019
- March 2019
- February 2019
- January 2019
- December 2018
- November 2018
- October 2018
- September 2018
- August 2018
- July 2018
- June 2018
- May 2018
- April 2018
- March 2018
- February 2018
- January 2018
- December 2017
- November 2017
- October 2017