நவரத்தினங்கள்

நவரத்தினங்களால் விளையும் நன்மைகள்

வாழ்க்கை வண்டியானது நம்பிக்கை என்னும் சக்கரத்தில்தான் சுழன்று கொண்டிருக்கின்றது. என்னால் இது முடியும், நான் இதைச் சாதிப்பேன், வாழ்க்கையில் நானும் உயர்வடைவேன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியங்கள். லட்சியங்கள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் இல்லாத  ஓடையைப் போன்றது. வறண்ட வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை.  எதையாவது சாதிக்க வேண்டுமென்பதே ஒவ்வொருவரின் கனவாகும். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழும் நாட்களானது லட்சியங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

ஆனால் நினைத்தவுடன் நம் லட்சியங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். இறைவன் இருக்கின்றானா? இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதைவிட, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்பினால் போதும். அது எந்த உருவத்தில் இருந்தாலும் சரி.

மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் நம் கையில் இல்லை என்பார்கள். ஒரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் அந்த தேதி, மாதம், வருடம், நேரம், பிறந்த ஊர் ஆகியவற்றை வைத்து ஜெனன ஜாதகம் என்ற ஒன்றைக் கணிக்கிறோம். அந்த குழந்தை பிறந்த நேரத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அதுவே அக்குழந்தையின் ஜெனன நட்சத்திரம் ஆகும். நவக்கிரகங்களில் அந்த நட்சத்திரம் எந்த கிரகத்திற்குரியதோ, அந்த கிரகத்தின் திசைதான் அக்குழந்தைக்கு முதலில் நடைபெறும். இது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது. ஒரு மனிதனுக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும், அவனது வாழ்வில் கிடைக்கும் வெற்றிகளை வைத்தே அவனுடைய பெயரையும் புகழையும் உயர்த்தும் நல்வாழ்வு கிடைக்கும்.

அதுவே தொட்டதெல்லாம் தோல்வியாகும் போது மனம் உடைந்து போகிறான். ஏனிந்த அவலநிலை என யோசிக்கிறான்.  உடல் நிலை சரியில்லாதபோது டாக்டரைத் தேடி ஓடுவதைப் போல வாழ்க்கை நிலை சரியில்லாதபோது அவனுடைய ஜெனன ஜாதகம் என ஒன்றிருப்பது அவனின் நினைவுக்கு வரும். 

அப்பொழுது ஜெனன ஜாதகம் கிரக நிலைகள் என்ன திசையில் நடைபெறுகிறது, அத்திசையில் விளையும் நன்மை தீமைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்வதுடன் நவரத்தினங்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். நடைபெறும் திசை பலமற்று இருந்தால், அத்திசையை பலப்படுத்துவதற்காக அத்திசைக்குரிய நவரத்தினக் கல்லை அணிந்து கொண்டால் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் குறையும் என்பதையும் உணர்கிறோம்.

நவரத்தினங்கள் அணிவதிலும் நிறைய விதிமுறைகள் உள்ளன. பலர் நவரத்தினங்களை ஒன்றாக சேர்த்து அணிகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். எல்லா நவரத்தினங்களும் ஒரே நேரத்தில் நல்லதைத் செய்யும் எனக்கூற முடியாது. சில ரத்தினங்கள் அந்த ஜாதகருக்கு தோஷத்தை தருவதாக இருந்தால் நற்பலன்கள் ஏற்படுவதற்கு பதில் எதிர்மறையான பலன்களை உண்டாக்கிவிடும். அதாவது எலி வலைக்கு பயந்து புலி வலையில் தலை வைத்ததைப் போல ஆகும். சாதாரணமாக ஒரு இரத்தினத்தை ஒரு கேரட்டிற்கு மேல்தான் அணிய வேண்டும்.

அது போல எண்கணிதப்படி இரத்தினங்கள் அணிவதும் நற்பலனைத் தரும். எண்கணிதப்படி இரத்தினங்கள் அணிவதால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும். நட்சத்திரத்தின் அடிப்படையிலும் நவரத்தினங்களை தேர்வு செய்யமுடியும். அதிலும் குறிப்பாக நமக்கு என்ன திசை நடக்கிறதோ, அந்த திசை எந்த கிரகத்தின் ஆதிக்கத்திற்குரியதோ, அதற்கேற்ற ரத்தினங்களை அணிந்து கொள்வதே நல்லது. அப்பொழுதுதான் அந்த கிரகத்திற்குரிய பலனை முழுமையாக அடைய முடிகிறது.

சிலர் தவைலிக்கு கடையில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டேன். சரியாகி விட்டது. ஆனால் மீண்டும் வந்து விட்டது என கூறுவார்கள். அதுபோல நாமே ஒன்றை முடிவு செய்து ஏதாவது ஒரு கல்லை வாங்கி அணிந்து கொண்டு இது இப்படி, அது அப்படி என புலம்புவதை விட நல்ல ஜோதிடராக பார்த்து கலந்தாலோசித்து அதற்கேற்றவாறு நவரத்தினங்களை அணிவது சிறப்பு.

நவரத்தினங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் உள்ளதாக பல ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. நமது ரிஷிகளும், பல கணித வல்லுனர்களும் ஜோதிட கலையை மேம்படுத்தி உள்ளனர். அவர்கள் ஜோதிடத்தைப் பல பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவற்றுள் ரத்தினக் கற்கள் பற்றிய குறிப்புகளும் முக்கியமானதாகும். மனித தோற்றம் எவ்வளவு பழமையானதோ, ரத்தினக் கல்லும் அவ்வளவு பழமையானதாகும்.

 

எப்படி அணிவது?

நவரத்தினங்களைச் சரியான ஜோதிடர்களை பார்த்து வாங்கும் போது அவர்களே நவரத்தினங்களை பூஜையில் வைத்து அதற்கேற்ற சக்திகளை ஏற்றி நல்லபடியாக வாழ்க்கை வளம்பெற செய்து தருவார்கள். நாமே கடையில் சென்று வாங்கும் போது வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்து இறைவனை வழிபட்டு சுத்தமான பசும்பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் சுப ஓரையில் அந்த ரத்தினத்திற்குரிய விரலில் அணிந்து கொள்வது நல்லது. எந்தக்கை, மற்றும் எந்த விரலில் ரத்தினக்கல் மோதிரங்களை அணிய வேண்டும் என்பதிலும் சில விதிமுறைகள் உள்ளன.  அதாவது வலது கை குருவாலும், இடது கை சுக்கிரனாலும் ஆளப்படுகின்றது.  உடலின் உயிர் சக்தியானது அதிகமாவது அல்லது குறைவதை வலது மற்றும் இடது கைகள் குறிக்கின்றன.

தீய கிரகத்தின் திசை நடைபெற்று அந்த தீய விளைவைக் குறைக்க ஒரு ரத்தினம் அணிய வேண்டியிருந்தால் அதனை இடது கையில் அணிய வேண்டும்.

பலம் பெற்ற கிரகத்தின் திசை நடைபெற்று அதன் பலத்தை மேலும் அதிகரிக்க அத்திசைக்குரிய கிரகத்தின் ரத்தினத்தை வலது கையில் அணிய வேண்டும்.

அதேபோல அசுபத் தன்மையுடைய கிரகத்தின் அசுபத் தன்மையைக் குறைக்க அந்த கிரகத்திற்கு எதிரான இரத்தினத்தை அணிவதும் நற்பலனை ஏற்படுத்துவதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

உதாரணமாக, ராகு திசை நடந்து ராகு அந்த ஜாதகருக்கு அசுபராக இருந்தால் கனக புஷ்ப ராகம் அல்லது புஷ்பராக கல்லை வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும். ஏனென்றால் புஷ்பராகம் குருவின் ரத்தினமாகும். குருவும், ராகுவும்  பகைவர்கள். இதனால் சுபகிரகமாகிய குருவின் ரத்தினத்தை அணிவதால் ராகுவால் உண்டாகக்கூடிய அசுப தன்மைகள் குறையும்.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *