பரணி நட்சத்திரத்தில் பிறந்தவா்களின் வாழ்கை ரகசியம்

பரணி

ஜோதிட மாமணி,முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)                                                         Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,சென்னை — 600 026 தமிழ்நாடு, இந்தியா.cell: 0091  7200163001. 9383763001,

     இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பரணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள்  லீ, லு, லே, லோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் சொ, சௌ ஆகியவை.

குண அமைப்பு
      பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல் படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும் போது சரியாக காலை வாரி விடுவீர்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பீர்கள். புத்தக புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.

குடும்பம்
     பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற சொல்லிற்கேற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்து கொண்டு இருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன் சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.

தொழில்;
     எந்த தொழில் உத்தியோகத்தில் இருந்தாலும் மற்றவர்கள். தங்களை பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பெரிய பதவிகளை வகுக்க கூடிய ஆற்றல் பெற்றவராயினும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மூழ்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கும். வணிகவியல்,பல்,கண்,காது ஆகிய துறைகளிலும் வணிக மேலாண்மை, பைனான்ஸ் போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.

நோய்கள்;
     பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம வேட்கை இருக்கும் என்பதால் பால் வினை நோய்கள் தாக்கும். மர்ம உறுப்புகளில் பிரச்சனை உண்டாகும். சர்க்கரை நோய், கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

திசை பலன்கள்;
      பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். பிறக்கும் போதே சுக்கிர திசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.
      இரண்டாவது திசையாக வரும் சூரிய திசை காலங்களில் சுமாரான நற்பலன்களையேப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவார்கள். சந்திரன் திசை 3வது திசையாக வருவதால் இதிலும் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும். 
செவ்வாய் திசையில் பூமி மனை வாங்கும் யோகம்  மனைவி வழியில் அனுகூலம் உண்டு. ராகு திசை 5வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், சமுதாயத்தில் நல்ல உயர்வினையும் பெற முடியும். செல்வம் செல்வாக்கும் உயரும்.
      ஆறாவது திசையாக வரும் குரு திசை மாரக திசையாகும். ஆனால் குரு திசை காலங்களே மேலும் முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு பலம் பெற்று அமைந்து விட்டால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.
     மேற்கூறிய திசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.    இந்த நட்சத்திரத்தை மார்கழி மாதம் இரவு 10.00 மணி சுமாருக்கு வானத்தின் உச்சியில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து முக்கோண வடிவில் தோற்றமளிக்கும். பரணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நெல்லி மரமாகும். நெல்லி மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்;
     இசை, ஒவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, நடன அரங்கேற்றம் செய்ய, தீர்த்த யாத்திரை செய்ய, மூலிகை செடிகளை பயிரிட மற்றும் ரோஜா உள்ளிட்ட முற்செடிகளை நட பரணி நட்சத்திரம் நல்லது. 

வழிபாட்டு ஸ்தலங்கள்;
திருவாரூர்;
     திருத்துறைப்பூண்டி பாதையில் கச்சனத்துக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்லிக்கா என்ற ஸ்தலத்தில் உள்ள நெல்லி மரங்களை வழிபாடு செய்வது நல்லது. கும்ப கோணத்திலிருந்து சுமார் 8 .கி. மீ தொலைவில் உள்ள பழையாறை வடதளியில் உள்ள சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபாடு செய்யலாம். 
   திரு ஆவினன் குடியில்  உள்ள ஸ்தல மரமான நெல்லி மரத்தையும் வழிபடலாம்.
     சென்னைக்கு அருகிலுள்ள திருப்போருரில்  வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு, முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.

கூற வேண்டிய மந்திரம்
     ஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே      சன்ய குமாரி தீமஹி      தள்நோ துர்கி பிரசோதயாத்

பரணி நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
     பரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *