Puram natchathira palangal

பூரம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோறாவது இடத்தை பெறுவது பூர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூர நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியதாகும். இது உடலில் முதுகெலும்பு, இதயம் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் மோ,ட,டி,டு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மொ.மௌ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை ஆணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். காம உணர்வு அதிகமிருப்பதால் மனம் அலை பாயந்து கொண்டேயிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக் கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன் கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள்.

குடும்பம்;

     காதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் மனைவி பிள்ளைகளை மட்டுமில்லாது உற்றார் உறவினர்களையும் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள். பிறர் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். இளம் வயதில் நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் மனதில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடி கொண்டிருக்கும். இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்கள். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். 30 வயதிற்கு மேல் அதிரடி மாற்றங்கள்  ஏற்பட்டு வீடு, வண்டி வாகனங்களை வாங்கி சேர்ப்பார்கள். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதால் சேமிப்பு இல்லாமல் அடிக்கடி கடன் வாங்க கூடிய நிலையும் உண்டாகும்.

தொழில்;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது  உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நடிப்பு துறையில் அதிக ஆர்வம் உண்டு. அரசு உத்தியோகமோ, சொந்த தொழிலோ எதிலும் சம்பாதிக்கும் யோகம் அதிகமிருக்கும், சுற்றுலா துறை, பொது மக்கள் தொடர்பு துறை, வர்த்தக துறை போன்றவற்றில் பணி புரியும் ஆற்றல் உடையவர்கள். சிலர் புத்தக வியாபாரிகளாகவும், பெண்கள் உபயோக படுத்தக் கூடிய பொருட்களை விற்பனை செய்ய கூடியவர்களாகவும் வாகன திரவியங்களை விற்பவராகவோ இருப்பார்கள். சூதாடத்திலும் எதிர்பாராத வகையில் பண வரவுகள் உண்டாகும். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள்.

நோய்;

     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட நோய்களால் பின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள் சிற்றின்ப பிரியர்கள் என்பதால் பால்வினை நோய்களும் தாக்கும். சர்க்கரை வியாதியாலும் அவதிபடுவார்கள். மின்சாரம் தாக்கும், மனநிலையில் பாதிப்புகளும் உண்டாகும்.

திசை பலன்கள்;

     பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சுக்கிர திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 20 என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சுக்கிர திசா காலங்களை பற்றி அறியலாம். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்களின் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.

    இரண்டாவதாக வரும் சூரிய திசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்திசை காலங்களில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

                மூன்றாவதாக வரக்கூடிய சந்திர திசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.

                நான்காவதாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும். அடுத்து வரும் ராகு திசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களின் முற்பாதியானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையோ, மாரகத்தையோ ஏற்படுத்தும்.

விருட்சம்;

     பூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை மார்ச் மாதம் இரவு சுமார் பதினோரு மணியளவில் உச்சி வானத்தில் பார்க்க முடியும்.

செய்ய கூடிய நல்ல காரியங்கள்

     பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது,  வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

கஞ்சனூர்;

     கும்பகோணம்&மயிலாடுதுறை கல்லணை சாலையில் உள்ள அக்னீசுரர் கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் சுக்கிரனின் பரிகார ஸ்தலம்.

நாவலூர்;

     தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் திருவாரூர் சாலையில் திருச்சேறை மாடக் கோயில் எழுந்தருளியுள்ள பலாசவனநாதர்&பெரிய நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

தலைச்சங்காடு;

     நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் 1.கி.மீ தூரத்திலுள்ள கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலில் அருள் பாலிக்கும் சங்கருணா தேவசுவரர்&சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம் இவற்றை வழிபாடு செய்தால் நற்பலனை பெற முடியும்.

கூற வேண்டிய மந்திரம்;

ஸம் பூஜயாமி அர்ய மானம் பல்குனி தார தேவதாம் தூம் ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்

பூர நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்தரங்கள்

பரணி,  பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி போன்ற ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *