Swathi natchathira palangal

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

எழுதியவர்

முனைவர் முருகுபாலமுருகன்,

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினைந்தாவது இடத்தை பெறுவது சுவாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு ஆண் பெண் இனமாக கருதப்படுகிறது. இவர் துலா ராசிக்குரியவராவார். உடல் பாகத்தில் தோள் பட்டை, சிறு நீரகம் போன்ற உறுப்புகளை இவர் ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ரூ, ரே, ரோ, த தொடர் எழுத்துக்கள் தா ஆகியவையாகும்.

குண அமைப்பு;

சுவாதி நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் அதிகமிருந்தாலும் நல்ல அறிவுள்ள திறமைசாலிகள். நற்பண்புகளும் உடையவர். மனித உரிமைகளைப் பற்றி அடிக்கடி சட்டம் பேசுவார்கள். பிறருக்காக அதிகம் உதவி செய்வார்கள். அனைவரையும் தன் வசம் இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். சில நேரங்களில் தான் சொல்வது தான் சரி என தவறான வழியினையும் காட்டி விடுவார்கள். திடமான புக்தி உடையவர்கள் என்றாலும் அடிக்கடி தன் புக்தியை மாற்றி கொள்வார்கள். எளிதல் பயப்படும் குணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாரிடமிருந்தும் வித்தியாசப் படுவார்கள் எல்லா நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள் புன்னகை பூத்த முகமும் நீண்ட விரல்களும், பிறரை வசீகரிக்கும் தோற்றமும் பலர் மத்தியில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். விளையாட்டு குணம் அதிகமிருக்கும். சுய மரியாதையை இழக்க விரும்ப மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே செய்வார்கள். அதில் தவறுகள் நேர்ந்தால் பகிங்கிரமாக மன்னிப்பையும் கேட்பார்கள். பெரியவர் சிறியவர் என பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். இவர்களின் தோற்றத்தை கொண்டு வயதை எடை போட முடியாது. நல்ல எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர்கள்.

குடும்பம்;   

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எது நல்லது, எது கெட்டது என ஆராய்ந்து செயல்படுவார்கள். உற்றார் உறவினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். மண வாழ்க்கை சற்று தாமதமாகத் தான் அமையும். அதிக பிள்ளைகளை பெற்று கொள்ள விட்டாலும் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை தாராளமாக செய்து கொடுப்பார்கள். முன் கோபம் அதிகமுடையவர்கள் என்பதால் கணவன் மனைவியிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். பிராணிகள் பறவைகள் அனைத்தின் மீதும் பாசம் கொண்டவர்கள். மலை கடல் மரம் கொடி செடி போன்றவற்றினை அதிகம் விரும்பி நேசிப்பார்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

தொழில்;

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் கற்றது கை மண் அளவு  என்பதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். சங்கீதம், நாட்டியம், இலக்கியம் போன்றவற்றில் அதிக நாட்டம் இருக்கும். நல்ல மனவலிமை கொண்டவர்கள் என்பதால் தொழில் ரீதியாக உண்டாக கூடிய பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பார்கள். மொத்த  வியாபாரிகளாகவும், மார்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். எப்பொழுதும் சுதந்திரமாகவே செயல்படுவார்கள். சகல சாஸ்திரங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார்கள். சிலர் கலை துறையை சார்ந்தவர்களாக-வும், பேராசிரியர்களாகவும் கெமிக்கல் இஞ்சினியர்களாகவும் ஏரோனாட்டிக்ஸ். கம்பியூட்டர் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

நோய்கள்;

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, தோல் நோய், ஹார்ட் அட்டாக், சிறு நீர் குழாய்களில் பாதிப்பு, இரண்யா கோளாறு, கர்ப்பபை போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

திசைப்பலன்கள்;

  சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு திசை முதல் திசையாக வரும். இத்திசையின் மொத்த வருட காலங்கள் 18 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு ராகு திசையின்  மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். இளம்வயதில் ராகு திசை நடைபெறும் என்பதால் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். அதுவே ராகு பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் பேச்சில் வேகம், கல்வியில் மந்த நிலை பிடிவாத குணம், பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

    இரண்டாவதாக வரும் குரு திசை காலங்களில் வாழ்வில் முன்னேற்றம், கல்வியில் ஈடுபாடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி. பெற்றோர் பெரியோர்களிடையே ஒற்றுமை குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, பணவரவுகள் தாராளமாக இருக்கும் யோகம் கொடுக்கும்.

மூன்றாவதாக வரும் சனி திசை 19 வருட காலங்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் யோகமும் முன்னேற்றமும், சமுதாயத்தில் பெயர் புகழ் உயரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.

    நான்காவதாக வரும் புதன் திசையிலும் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

     சுவாதி நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் மருத மரமாகும். இம்மரம் அமைந்துள்ள திரு ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது மாணிக்கம் போன்ற ஜோதியுடன் காட்சி தரும் இந்த நட்சத்திரத்தை ஜீன் மாதம் இரவு 10 மணியளவில் வானத்தில் காணலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் செய்ய கூடிய நல்ல காரியங்கள்

மாங்கல்யம் செய்தல், திருமணம் செய்தல், பெயர் சூட்டுதல், பூ முடித்தல், முடி களைதல், வீடு வாகனம் வாங்கல், கல்வி ஜோதிடம் மருத்துவம் கற்றல், அன்ன தானம் ஆயுத பிரயோகம், சமுத்திர யாத்திரை செய்தல், பயிடுதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்

பிள்ளையார்பட்டி;

     சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு கிழக்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மருதீசுவரர் அருள் பாலிக்கும் மருதகுடி ஸ்தலம்

ஸ்ரீரங்கம்;

     ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தருகிலுள்ள காட்டழகிய சிங்கர் திருக்கோயில்

திருப்புடை மருதூர்;

     நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்துக்கு வடகிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள இந்திரன் வழிபட்ட ஸ்தலம். தைபூசத்தன்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு.

கடத்தூர்;

     கோவை மாவட்டம் உடுமலை பேட்டைக்கு வடகிழக்கே 18 கி.மீ தொலைவில் அமராவதி ஆற்றங்கரையில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் அர்ஜீனேஸ்வரர் திருக்கோயில்

கூற வேண்டிய மந்திரம்

     உக்ரம் வீரம் மகாவிஷணும்

     ஜீவலந்தம் ஸர்வதேமுகம்

     ந்ருஸிம்ஹம் பிஷனம் பத்ரும்

     ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்!

பொருந்தாத நட்சத்திரங்கள்

     ரோகிணி, திருவாதிரை. அஸ்தம், சுவாதி , திருவோணம், , சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *