Uthiram natchathira palangal

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்

     இருப்தேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது இடத்தை பெறுவது உத்திர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்கும்,  2,3,4,&ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முதுகெலும்பு பகுதியை முதல் பாதமும்,  2,3,4&ம் பாதங்கள் குடல், சிறு நீர்பை, கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டே, டோ, ப, பி ஆகியவை. தொடர் எழத்துக்கள் பா, டீ ஆகியவையாகும்.

குண அமைப்பு;

     உத்திர நட்சத்திரல் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவாகளாகவும் இருப்பார்கள். கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். இவர்களை கண்டவர்கள் மேலும் மேலும் பேசவும் பழகவும் ஆசைப்படுமளவிற்கு வசீகர தோற்றமிருக்கும். அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருந்தாலும் குறைகளை கண்டால் முகத்தில் அடித்தாற் போல பேச கூடியவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய நிலைமையிலிருந்து தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களிலில் ஈடுபாடு அதிகமிருக்கும். எவரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணி காப்பார்கள். சிக்கனத்தை கையாள்பவராகவும் சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள்.

குடும்பம்;

     உத்திர நட்சத்திரகாரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி பசியெடுப்பதால் சிறுக சிறுகவே உணவுகளை உண்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும். மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள்.

தொழில்;

     உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவராகவோ இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனதுள்ளவர்கள் என்று பெயரெடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்தவொரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.

நோய்;

  இவர்களுக்கு முதுகில் வலியும் கழுத்து வலியும், இரத்த கொதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பும் மூளை  நரம்புகளில் ரத்த அடையும் உண்டாகும். உடல் நிலையில் பல ஹீனமாக இருப்பார்கள்.

திசை பலன்கள்;

  உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சூரிய திசை காலங்களை அறியலாம். சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் தந்தைக்கு கெடுபலன்களையும் உண்டாகும்.

  இரண்டாவதாக வரும் சந்திர திசை காலங்களிலும் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.

   மூன்றாவதாக வரக் கூடிய  செவ்வாய் திசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்.

நான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு நின்ற விட்டதிபதி பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தையும்  உண்டாக்கும்.

குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை அளிக்கும். 6வதாக வரும் சனி திசை காலங்கள் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.

    உத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரமும், இலந்தை மரமுமாகும். இம்மரத்தை தொடர்ந்து வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திர ஜோடியை மார்ச் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;

     உத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல்,  புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்தல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம்.

வழி பாட்டு ஸ்தலங்கள்;

கரவீரம்;

வடகண்டம் என தற்போது அழைக்கப்படும் கருவீர ஸ்தலத்தில் கர வீரநாதராகவும் அன்ன பிரத்யட்ச மின்னம்மையாகவும் அருள் பாலி ஸ்தலத்தின் ஸ்தல விருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர்&கும்பகோணம் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது.

காஞ்சிபுரத்து மேற்கேயிருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வரரையும் வணங்கலாம்.

ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகிலுள்ள திருக்குளத்தை என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லி தாயார்,ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் உடனுறை ஸ்ரீசோரநாத பெருமானையும் வழியலாம்.

சென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லிசரரையும் வழிபடுவது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்

    ஓம் மஹாதேவ்யை சவித்மஹே

     விஷ்ணுபத்ன்யை ச தீமஹி

     தன்னோ லஷ்மி பிரசோதயாத்

பொருந்தாத நட்சத்திரங்கள்

     கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *