ரிஷபம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

ரிஷபம் – விகாரி வருட பலன்கள் 2019-2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255.  வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் பிடிவாத குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டில் குருபகவான் திருக்கணிதப்படி ஐப்பசி 19-ஆம் தேதி வரை (05-11-2019) 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதாரநிலை மேன்மை அடையும். ஜென்ம ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் சனி, கேதுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். அஷ்டமசனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். புத்திர வழியில் மனநிம்மதி குறைவும் உண்டாகும்.

திருக்கணிதப்படி வரும் ஐப்பசி 19-ஆம் தேதி (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் அதன் பின்பு பணவரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு அனுகூலம் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே உத்தமம். திருக்கணிதப்படி தை மாதம் 10-ஆம் தேதி (24-01-2020) ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் அஷ்டமசனி முடிவடைவதால் உங்களுக்குள்ள எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம்              

இந்த ஆண்டில் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சிறுசிறு மருத்துவ செலவுகளுக்குப் பின் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் உண்டாக கூடிய மருத்துவ செலவுகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடக் கூடிய வலிமையும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

ஆண்டின் முற்பாதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நற்பலனை தரும்.

உத்தியோகம்

பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் நிம்மதியாக செயல்பட முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பேசும் போது நிதானம் தேவை. அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானித்து செயல்படவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தாமதப்படும். வெளியூர் தொடர்பு உடையவைகளால் சுமாரான லாபம் கிட்டும். தொழிலாளர்கள் வீண் சங்கடங்களை ஏற்படுத்தினாலும் அபிவிருத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கொடுக்கல்வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்புகள் கிடைக்கும். குரு பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாக கூடும் என்பதால் ஐப்பசிக்கு பின்பு கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறியான நிலை நீடிக்கும்.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் அமோக ஆதரவுகளைப் பெற்றுவிடுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதோடு உடல் நிலையும் சோர்வடையும். பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள சற்று பாடுபட வேண்டியிருந்தாலும் பதவிக்கு பங்கம் ஏற்படாது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கா விட்டாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானியத்தொகை சற்றே தாமதப்படும்.

பெண்கள்

உடல் நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் சேமிக்க முடியும்.

மாணவமாணவிகள்

கல்வியில் சற்று மந்த நிலை, ஞாபக மறதி போன்றவை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை தடையின்றி எடுத்து விடுவீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளையும், நட்பு வட்டாரங்களையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தடை தாமதங்களுக்கு பின் கிடைக்கும்.

மாதப்பலன்

சித்திரை   

ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது முன்கோபத்தை குறைப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வைகாசி 

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே தேவையற்றப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குரு 7-ல் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

ஆனி                       

சூரியன், ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் பிரச்சினைகள் குறையும். குரு 7-ல் இருப்பதாலும் 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பலமும் வளமும் கூடும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோக ரீதியாக உயர்வுகளும், திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். விநாயகரை வழிபடுவது நல்லது.

ஆடி             

சூரியன், செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். சுக வாழ்வு சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. குரு 7-ல் இருப்பதால் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்சுடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். 8-ல் சனி, கேது இருப்பதால் உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. துர்கை அம்மனையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

ஆவணி

சுக்கிரன் 4-ல், குரு 7-ல் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் விலகி கை கூடும். செல்வம் செல்வாக்குப் பெருகும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். சூரியன், செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

புரட்டாசி   

உங்கள் ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் புதன், சுக்கிரன் 5-ல் சஞ்சாரம் செய்வதாலும் வலமான பலன்களை இம்மாதம் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். இதுவரை இழுபறியில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் குறையும். முருகனை வழிபடுவது நல்லது.

ஐப்பசி         

மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும் புதன், சுக்கிரன் 7-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை எளிதில் பெறுவீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தேவையற்ற எதிர்ப்புகள் மறைந்து மன நிம்மதி உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் கூட தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். 19-ஆம் தேதி ஏற்பட உள்ள குரு பெயர்ச்சியால் குரு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டிற்கு செல்வதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. முருகனை வழிபடுவது நல்லது.

கார்த்திகை          

சூரியன் 7-லும், குரு, சனி 8-லும் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களே விரோதிகளாக செயல்படுவார்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

மார்கழி     

அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் குரு, சனி, சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். தேவையற்ற எதிர்ப்புகளையும் போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உறவினர்கள் ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் நீங்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சுக்கிரன் 9-ல் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். சிவபெருமானை வழிபடுவதால் நற்பலன் கிட்டும்.

தை               

சூரியன், புதன் பாக்கிய ஸ்தானமான 9-லும், சுக்கிரன் 10-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சில போட்டிகளை சந்தித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதன் மூலம் அலைச்சலை தவிர்க்க முடியும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

மாசி                        

சூரியன், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். 2-ல் ராகு, 8-ல் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைத்தாலும் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டி வரும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

பங்குனி

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். 2-ல் ராகு, 8-ல் கேது, குரு சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்  – 5,6,8,

நிறம்  – வெண்மை, நீலம்

கிழமை – வெள்ளி, சனி

கல்   – வைரம்

திசை  – தென்கிழக்கு

தெய்வம் – அஷ்ட லட்சுமி

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *