Bath room, Toilet – Vasthu

குளியல் மற்றும் கழிவறை

ஒரு வீட்டில் கழிவறை குளியலறை எங்கு அமைக்க வேண்டுமென வாஸ்து ரீதியாக பார்த்தால் ஒரு வீட்டில் தென் கிழக்கு, தெற்கு பகுதி கிழக்கை ஒட்டிய தெற்கு பகுதி வடமேற்குப் பகுதி, மேற்கு பகுதியில் வடக்கை ஒட்டிய பகுதியில் கழிப்பறை, குளியலறை அமைக்கலாம். பொதுவாக தென் மேற்கு பகுதியிலும் வடகிழக்கு பகுதியிலும் கழிவறை குளியலறை அமைக்க கூடாது. குறிப்பாக தென் கிழக்கு அல்லது வடமேற்கில் தான் கழிவறை குளியலறை அமைக்க வேண்டும்.

கழிப்பறையில் கழிவு பொருட்கள் செல்ல கூடிய தொட்டியானது எப்படி அமைக்க வேண்டுமென்றால் ஒருவர் கழிவறையை உபயோகிக்கும் போது தெற்கு அல்லது வடக்கு பார்த்து அமர்வதுப் போல அமைக்க வேண்டும். கண்டிப்பாக சூரியன் உதிக்கும் திசையான கிழக்குப் பார்த்தும் சூரியன் உதிக்கும் திசைக்கு எதிர்புறமான மேற்கு திசையிலும் கழிவறையில் அமர்வதும் போல் இருக்க கூடாது.

குறிப்பாக படுக்கையறைக்கு ஒட்டியவாறு கழிப்பறை அமைக்கும் போது கூட அந்த படுக்கை அறைக்கு தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் உள்ள பகுதியில் தான் அட்டாச்டு பாத்ரூம் அமைக்க வேண்டும். கண்டிப்பாக வடகிழக்கு தென்மேற்கில் அமைக்கக் கூடாது. பொதுவாக வடகிழக்கு திசையானது ஈசனே குடியிருக்க கூடிய தெய்வீக ஸ்தானம் என்பதினால் அங்கு கழிப்பறை அமைப்பதோ, செல்வத்தை குவிக்கும் ஸ்தானமான தென்மேற்கு திசையிலும் கழிவறை அமைப்பதோ கூடாது. கழிவறைக்கு ஒட்டியது போல பூஜையறை இருக்க கூடாது. அது போல தலைவாசலுக்கு நேராகவும், படிக்கட்டுக்கு கீழும் கழிவறை இருக்க கூடாது.

கழிவு நீர் செல்லும் வழி
மேற்கூறியவாறு கழிப்பறை குளியல் அமைந்த பிறகு இதிலிருந்து செல்லும் கழிவு நீரானது எந்த திசையில் கொண்டு சென்றால் நல்லது என பார்த்தால் ஒரு வீட்டின் நீரோட்டம் வடகிழக்கு மூலை வழியாக செல்வது நல்லது. ஒரு மனையில் தென் மேற்கு மூலையிலிருந்து முடிந்த வரை தெற்கு சுவருக்கு வெளிபுறம் குழாய் அமைத்து தென்கிழக்கு மூலைக்கு வந்து அதன் பிறகு அங்கிருந்து கிழக்கு சுவர்புறமாக வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீர் வெளியேற வேண்டும்.

மற்றொரு பாதையாக மேற்கு சுவரை ஒட்டி வெளிபுறமாக வடமேற்கு மூலைக்கு வந்து அங்கிருந்து வடகிழக்கு மூலைக்கு வந்து வடகிழக்கு வழியாக கழிவு நீரானது வெளியேற வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு சாத்தியமான ஒன்றாகும்.

வடக்கு பார்த்த வீட்டிற்கு கண்டிப்பாக வடமேற்கில் கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு மூலையிலோ, கிழக்கு சார்ந்த வடக்குப் பகுதியிலோ அமைப்பது தான் மிகவும் சிறப்பு. அது போல கிழக்குப் பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேறாமல் வடகிழக்கு பகுதியிலோ வடக்கு ஒட்டிய கிழக்கு பகுதியிலோ கழிவு நீரானது வெளியேறுவது போல் அமைக்க வேண்டும்.

வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற வேண்டிய அமைப்பு வாஸ்து ரீதியாக சிறப்பான அமைப்பு என்றாலும் தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு மூலையில் கழிவு நீர் வெளியேற்ற முடியாது என்பதால் முடிந்தவரை வடமேற்கு மூலையில் வடக்கை ஒட்டிய மேற்கு பகுதியில் கழிவு நீர் வெளியேறுவது போல் அமைப்பது சிறப்பு. கண்டிப்பாக தென்மேற்கு பகுதியில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் அமைக்கக் கூடாது.

தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையிலும், கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியிலும் கழிவுநீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதுப் போல் அமைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கழிவு நீரானது தென் மேற்கு மூலையில் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் கழிவு நீர் குழாய் அமைக்க கூடாது.

மேற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு மூலையிலிருந்து வடமேற்கு பகுதிக்கு குழாய் சென்று அதன் மூலம் கழிவு நீர் வெளியேறுவது போலவும் மற்றொரு பாதையாக தென்கிழக்கிலிருந்து கிழக்கு சுவர் வழியாக வடகிழக்குக்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடமேற்கு மூலம் கழிவு நீர் வெளியே செல்ல வேண்டும்.

தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்மேற்கு மூலையிலிருந்து குழாய் மூலம் தெற்கு சுவர் வழியாக தென்கிழக்கு மூலைக்கு வந்து வெளியே செல்ல வேண்டும். மற்றொரு பாதையாக தென்மேற்கு மூலையிலிருந்து மேற்கு சுவர் வழியாக வடமேற்கு சென்று அங்கிருந்து வடக்கு சுவர் வழியாக வடகிழக்கு சென்று அதன் பிறகு கிழக்கு சுவரை ஒட்டி தென்கிழக்கு வந்து அங்கிருந்து கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டும். பொதுவாக கழிவு நீர் குழாய் செல்லும் வழியில் அமைக்கப்படும். சேம்பரானது தெற்கு மேற்கு புறங்களில் முழுமையாக முடியிருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அமையக் கூடிய சேம்பரானது திறந்தும் இருக்கலாம். குறிப்பாக கழிவு நீர் செல்ல கூடியக் குழாய் ஆனது கட்டித்திற்கு நடுவே அமைக்ககூடாது.

செப்டிக் டேங்க்
சென்னை போன்ற பெருநகரங்களில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கு டிரைனேஜ் வசதி இருக்கிறது. கிராமப் பகுதிகளில் டிரைனேஜ் வசதி இல்லாத காரணத்தால் கழிவு நீர் தேங்குவதற்காக செப்டிங் டேங்க் அமைக்கிறார்கள் அந்த செப்டிக் டேங்கானது எந்த இடத்தில் அமைத்தால் சிறப்பு என பார்க்கின்ற போது கட்டிடத்தின் வெளியே வடமேற்கு, மேற்கு ஒட்டிய வடக்கு, வடக்கு ஒட்டிய மேற்கு தென்கிழக்கு, தெற்கு ஒட்டிய கிழக்கு, கிழக்கு ஒட்டிய தெற்கு ஆகிய திசைகளில் உள்ள பகுதிகளில் செப்டக் டேங்க் அமைக்கலாம்.

வடகிழக்குப் பகுதியில் நீரோட்டம் இருப்பது நல்லது என்றாலும், ஈசான்ய மூலை என்பதால் கழிவுநீர் தேங்குவது நல்லதல்ல. அதனால் வடகிழக்குப் பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்க கூடாது. ஒரு மனையில் தென்மேற்குப் பகுதியில் பள்ளம் இருக்க கூடாது என்ற காரணத்தாலும் செல்வத்தை குவிக்கும் உன்னத ஸ்தானம் தென்மேற்கு ஸ்தானம் என்பதாலும், தென்மேற்கில் செப்டிக் டேங்க் அமைக்க கூடாது.

ஒரு மனையில் உள்ள நுழையும் தலைவாசல் பகுதியில் நடைபாதைக்கு கீழே செப்டிக்டேங்க் கழிவுநீர் தேங்கும் சேம்பர், கழிவுநீர் குழாய் அமைவது கண்டிப்பாக கூடாது. தவிர்க்க முடியாத இடங்களில் கழிவுநீர் குழாய் மட்டும் அமைவது தவறல்ல.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *