Bed room – Vasthu

படுக்கையறை

          பகவெல்லாம் ஒடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் உடம்பிற்கு ஒய்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதற்கு உதவும் இடம் தான் படுக்கை அறை. சிலருக்கு எந்த வெளி இடங்களுக்கு சென்றாலும் தூக்கமே வராது. தன் வீட்டில் தன்னுடைய பெட் மற்றும் தலையணை, பெட்சீட்டுடன் படுத்தால் மட்டுமே உறக்கம் வரும். இதற்கு காரணம் இவையெல்லாம் பழக்கப்பட்டவையாக இருக்கும். வெளியிடம் என்பது பழகாத இடமாக இருக்கும். வெளியில் செல்லும் மனிதனுக்கு தினம் தினம் எவ்வளவோ பிரச்சனைகள், சங்கடங்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. சிலருக்கு மகிழ்ச்சியான செய்திகளும், குதூகலமும் உண்டாகிறது. அன்றாட நிகழ்வுகளை மீண்டும் நினைவு கூர்ந்து கணவன் மனைவி பகிர்ந்து கொள்ள கூடிய இடம் படுக்கை அறை தான். இப்பொழுது எல்லாம் இளைஞர்களுக்கும்  தனிமை தேவைப்படுகிறது. படுத்துறங்க, தன்னுடைய பொருட்களை பாதுகாத்து கொள்ள தனித்தன்மை முக்கியமாகிறது. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடமும் அவர்களது படுக்கையறைதான். இளம் தம்பதியருக்கு சொல்லவே வேண்டாம். கொண்டாட்டமும் குதூகலமும் படுக்கையறையில் தான். முதியவர்களுக்கு எப்பொழுதும் ஒய்வு வேண்டும். அவர்களுக்கென்று படுத்துறங்க ஒரு அறையை ஏற்படுத்தி கொடுத்து விட்டால் அவர்களுக்கொரு மகிழ்ச்சி. வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி அன்றாடம் சுழன்று கொண்டிருக்கும் மனிதன் எல்லா கவலைகளையும் மறந்து நிம்மதியாக ஒய்வெடுக்க கூடிய இடமாக அவனது படுக்கை அறை இருக்க வேண்டும்.

    மனநிம்மதியையும், சந்தோஷத்தையும் தரக் கூடிய படுக்கையறையானது வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமைந்தால் நிம்மதியான உறக்கம், நல்ல ஆரோக்கியம், கட்டில் சுகம் தாம்பத்ய வாழ்வில் ஒற்றுமை கெட்டகனவுகளற்ற உறக்கம், மனநிம்மதி போன்ற நற்பலன்கள் உண்டாகும் என பார்க்கும் போது மேற்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளே சிறந்ததாக கருதப்படுகிறது.

     இத்திசைகளில் அமையும் படுக்கை அறையில் கூட ஒருவர் படுத்து உறங்குவதற்கு உரிய பகுதியாக கருதப்படும் இடம் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியாகும். மேற்கூறிய இடங்களில் தான் கட்டில், மெத்தை, பாய் போட்டுப் படுப்பது மிக சிறப்பு. அதுவும் கட்டில் மெத்தையானது கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டிப் போடக் கூடாது. கட்டிலில் எந்த பக்கம் தலை வைத்துப் பார்த்தால் சிறப்பு என பார்க்கின்ற போது தெற்கில் தலை வைத்து வடபுறம் கால் நீட்டுவதும் மேற்கில் தலை வைத்து கிழக்கு புறம் கால் நீட்டுவதும், மிகச் சிறப்பாகும். தவிர்க்க முடியாத இடங்களில்  கிழக்குப் புறம் தலை வைக்கலாம். கண்டிப்பாக வடக்கு திசையில் தலை வைக்கவே கூடாது.

    படுக்கையறையானது தென்கிழக்கு திசையான அக்னி மூலையில் அமைத்தால் உடல் ஆரோக்கிய பாதிப்பு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, வீண் சண்டை சச்சரவுகள் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும் என்பதால் தென்கிழக்கில் படுக்கையறை அமைக்க கூடாது. அது போல வடகிழக்கு திசையானால் ஈசனே குடியிருக்கும் ஈசான்ய திசை என்பதால் அங்கு படுக்கை அறை அமைப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்த இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வடகிழக்கில் படுக்கை அறை அமைந்தால் முதியவர்கள் குழந்தைகள் வேண்டுமென்றால் உபயோகிக்கலாம். தாம்பத்திய வாழ்வில் ஈடுபட கூடிய இளம் தம்பதிகள் கண்டிப்பாக உபயோகிக்க கூடாது. அது போல தென்கிழக்கு திசையில் படுக்கையறை அமைந்தால் அதனை விருந்தினர்கள் உபயோகிக்கலாமேத் தவிர பெண்கள் மற்றும் இளம் தம்பதியினர் உபயோகிப்பது அவ்வளவு நல்லதல்ல. சில வாஸ்து நூல்களில் வடமேற்கு திசையில் வடக்கை, ஒட்டிய பகுதிகளில் கூட படுக்கை அறை அமைத்தால் அங்கு விருந்தினர்கள் மற்றும், முதியவர்கள் படுப்பது தான் சிறப்பு என கூறப்பட்டுள்ளது.

   திருமணமாகாத இளம் பெண்கள் வடக்கை ஒட்டிய வடமேற்கு திசையில் படுக்கையறை அமைத்து படுத்தால் மனது  அலைபாய கூடிய சூழ்நிலை தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். ஆக தென் மேற்கில், மேற்கில், மற்றும் வடமேற்கு பகுதியில் படுக்கை அறை அமைப்பது தான் மிகச் சிறப்பு.

தென் மேற்கில் படுக்கை அறை அமைக்கும் போது கூட சிலர் வீடு கட்டும் போது படுக்கை அறைக்கு தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கட்டில் போட முடியாத அளவிற்கு செல்ப், ஜன்னல் அல்லது கழிப்பறை கதவு போன்றவற்றை அமைத்து விடுகிறார்கள். அப்படி அமைக்காமல் கட்டில் போடுவதற்கு வசதியாக படுக்கை அறை அமைக்க வேண்டும். பொதுவாக நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இடப் பற்றாகுறை காரணமாக மிகச்சிறிய வீடுகளில் குடியிருப்பவர்கள் படுக்கை அறை எந்த இடத்தில் அமைத்தாலும் பரவாயில்லை. அந்த  இடத்திற்கு தென்மேற்கு திசையில் கட்டில் மெத்தை போன்றவற்றை போட்டு படுத்தால் நிம்மதியான உறக்கமும் திருப்தியான குடும்ப வாழ்வும், கணவன் மனைவியிடையே அந்யோன்யமும் அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். தேவையற்ற கனவுகளும் வராது.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *